Monday, May 31, 2010
மிஸ்டர் கழுகு: ஆளுங்கட்சியின் அலர்ஜி 'நெ.1'
''மறுபடியும் கொடநாடு!'' - டமாரம் அடித்தபடி என்ட்ரி கொடுத்த கழுகார், ''மீண்டும் கொடநாடு பயணத்துக்கு பேக்கிங் ஆரம்பம்! இந்த முறை ஓய்வுக்காகக் கிளம்பவில்லை. போயஸ் கார்டன் வீட்டில் மராமத்து வேலைகள் தொடங்கி இருக்கின்றன. வேலைகள் முடிந்து கார்டன் புதுப் பொலிவு பெறும் வரை அம்மையாருக்கு மலை வாசம் தான்!'' என்று ரிலாக்ஸாக எதிரில் அமர்ந்தார்.
''மராமத்து வேலைகள் கார்டனுக்கா? இப்போது, அது கட்சிக்குத்தானே அவசியம்?'' என்றோம்.
''சரியாகச் சொன்னீர்... கட்சியில் மிச்சம் மீதி இருக்கும் சீனியர் புள்ளிகளும் இதைத்தான் சொல்கிறார்கள். தூணாக இருந்தவர்களெல்லாம் அடுத்தடுத்து தாவிக் கொண்டிருப்பதில் சீனியர்கள் ரொம்ப சூடாகவும் சோகமாகவும் இருக்கிறார்கள். முத்துசாமியும் தி.மு.க. பக்கம் போவதற்கு மூட்டை கட்டியதும்... அ.தி.மு.க-வுக்குள் பொருமல் புயலே வீசுகிறது. முதலில் மீடியாக்கள் மூலம் முத்துசாமி 'நூல்'தான் விட்டார்! தி.மு.க. பக்கம் போவதாக தகவல் பரவினாலாவது 'அம்மா' அப்பாயின்ட்மென்ட் கிடைக்காதா என்பது அவர் கணக்கு! ஆனால், அவரைத் தொடர்பு கொண் டதோ 'சின்னம்மா'தான்! அவருடைய பேச்சில் திருப்திப்படாத முத்துசாமி, 'அம்மாவிடம் சில விஷயங்களை மனசுவிட்டுக் கேட்கணும். மற்றபடி இப்போதைக்கு ஏதும் சொல்லும் நிலையில் இல்லை' என்றாராம் இறுக்கமாக.
அடுத்த ஐந்தாவது நிமிடம், ஜெயலலிதாவே முத்துசாமியை அழைத்தார். 'எதுவா இருந்தாலும் தாராளமா என்னிடம் சொல்லுங்க...' என உரிமையுடன் தொலைபேசியில் கேட்டாராம். முத்துசாமி ரொம்பவே திக்குமுக்காட... மீண்டும் அழுத்தம் திருத்தமாக, 'உங்களுக்கு உரிய மரியாதையும் பொறுப்பும் கண்டிப்பா வழங்கப்படும்!' என்றாராம் அம்மையார். அன்று மாலை கட்சி அலுவலகத்துக்கு வந்த கையோடு, 'யாரையும் இழக்க விரும்பவில்லை' என உருக்கமாகவே ஜெ. பேசியதும் நடந்தது. ஆனால், அதன்பிறகும் முத்துசாமி வேறெதையோ எதிர் பார்க்கிறார் என்பதாக அம்மையாருக்குத் தகவல்வர... 'இந்த பிளாக்மெயிலுக்கு நான் ஆளில்லை' என்று கோபமாகிவிட்டாராம் ஜெ!''
''ஓ! அடுத்த நாள் நடந்த செயற்குழுவில் முத்துசாமியை வறுத்தெடுத்த பின்னணி இதுதானா?''
''அட, உம்ம காதுக்கும் வந்ததா?'' என்று வியந்த கழுகார், ''செயற்குழு அரங்கத்துக்கு வந்ததுமே, 'முத்து சாமி விவகாரம் பத்தி உறுப்பினர்கள் எதிர்பார்ப்பாங்க. அதைப்பத்தியும் பேசிடலாமே' என்று ஜெ. ஆரம்பிக்க, செயற்குழு பேச்சாளர்களுக்கு பக்கா சிக்னலும் கொடுக் கப்பட்டதாம். அவ்வளவுதான், 'யார் அந்த முத்துசாமி. பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு ஓடுபவர்களை சும்மா விடக் கூடாது' என்றெல்லாம் பின்னியெடுக்க ஆரம்பித்தார்கள் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.''
''பழம் புளித்த கதைதான்!''
''கேளும்! அ.தி.மு.க-வின் அவைத் தலைவர் மதுசூதனன் ஒரு படி மேலேயே போனார். 'இந்த மாதிரிக் கட்சியைவிட்டு ஓடிப் போறவங்களை ஓட ஓடத் துரத்தணும். அவங்க ஊருக்கே போய் தாக்கணும். அந்த ஆளு ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சென்னைக்கு ரயில் ஏறவே விட்டிருக்கக் கூடாது. அப்படிச் செஞ்சாத்தான், இனி எவனும் துரோகம் பண்ண நினைக்க மாட்டான்' என்று மது சீற, 'போதும் போதும்' என்று சிரிப்பையும் ரசிப்பையும் அடக்க முடியாமல் ஜெயலலிதாவின் முகம் மலர்ந்ததாம்!''
''அதுசரி!''
''கடைசியாகப் பேசிய ஜெ., 'நம்ம ஆட்சி போய் தி.மு.க. ஆட்சி வரும்போதெல்லாம் கூட்டப்பட்ட செயற்குழுவுக்கு முத்துசாமி வந்ததே இல்லை. எங்கோ உட்கார்ந்துகொண்டு அரசியல் செய்வார். இப்போதும்கூட 'இனி அ.தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது' என்கிற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தவே முத்துசாமி போன்றவர்களை கருணாநிதி இழுக்கிறார். இவர்களும் வாக்குறுதிகளை நம்பி ஏமாறுகிறார்கள். எனக்குத் தெரிந்து இதுவரை இல்லாத அளவுக்கு கட்சி எழுச்சியாக இருக்கிறது. அடுத்த வருடம் சட்ட மன்றத் தேர்தல் வந்தாலும் சரி... அதை ஆளுங்கட்சி இந்த வருடமே கொண்டு வந்தாலும் சரி... பலமாக சந்திப்போம். அடுத்தது அ.தி.மு.க. ஆட்சிதான்' என்று அம்மையார் சொல்ல... ரத்தத்தின் ரத்தங்கள் ஆரவாரத் துக்குக் குறைச்சல் இல்லை!''
பன்னீர் திராட்சையை தட்டில் வைத்தோம். பதமாக எடுத்து வாயில் போட்ட கழுகார், ''செயற்குழுவில் என்ன விவாதிக்கிறார்கள் என்று ஆர்வமாக கேட் டறிந்தாராம் முத்துசாமி. விவரம் கிடைத்ததும் கொதித் துப்போய் தன் ஆதரவாளர்களிடம் பேசி இருக்கிறார். 'விடுங்கண்ணே, போன வருஷம் உங்க ஒரே பையனுக்கு கல்யாணம் பண்ண அந்தம்மாவைக் கூப்பிட்டீங்க. அவங்க சென்னையில் கல்யாணத்தை வைக்கச் சொன்னாங்க. நீங்களும் வெச்சீங்க. கடைசியில், உங்க செலவுலேயே இருபதுக்கும் மேற்பட்ட இலவச திருமணங்களை நடத்தி கும்பலோடு கோவிந்தாவாக உங்க முகத்தில் கரி பூசினவங்கதானே. இதுக்கெல்லாம் வருத்தப்படுவதா?' என்று சூடு ஆற்றினார்களாம். ஆதர வாளர்களின் கருத்தை கேட்டவர், 'இனி தி.மு.க. தான்' என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்!''
''தி.மு.க-வின் ரியாக்ஷன் என்னவோ?''
''அம்மாவின் எரிச்சல் ரியாக்ஷனைத்தானே அவர் களும் எதிர்பார்க்கிறார்கள்! கோவையில் செம்மொழி மாநாடு நடத்துவதற்குள், அங்கே இன்னும் சில வெயிட்டான ரெட்டை இலை பார்ட்டிகளை சூரிய குடைக்குள் கொண்டு வந்துவிடுவார்களாம். கொங்கு மண்டலத்தில் எப்பவுமே அ.தி.மு.க-தான் வெயிட் என்பதை உடைத்துக் காட்டுவதற்கென்றே தனி டீம் போட்டுவிட்டார்களாம்!'
''அப்படியா!''
''இரு வாரங்களுக்கு முன்னால் ஈரோட்டில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் கலந்துகொண்ட புலவர் இந்திர குமாரி, திடீரென முத்துசாமியை வானளாவப் புகழ்ந்தாராம். 'தி.மு.க. மேடையில் அ.தி.மு.க. புள்ளி யைப் புகழ்வது நியாயமா?' என சிலர் கேட்க...'என் வாய் முகூர்த்தம் உங்களுக்குத் தெரியாதா? நான் தர்மபுரி கூட்டத்தில் செல்வகணபதியைப் புகழ்ந்து பேசினேன். அடுத்த இரு வாரங்களிலேயே அவர் தி.மு.க-வுக்கு வந்தார். மதுரைக் கூட்டத்தில் கடலாடி சத்தியமூர்த்தியைப் புகழ்ந்தேன். அடுத்த மாதமே அவரும் வந்துவிட்டார். இப்போ முத்துசாமியைப் புகழ்ந்திருக்கிறேன். பார்த்துகிட்டே இருங்க... நான் யாரைப் புகழ்ந்தாலும் தோட்டத்து அம்மா வுக்கு சுர்ருனு கோபம் வரும். அதுக்கப்புறம், சம்பந்தப்பட்டவங்களோட மோதல் வந்தே தீரும்!' என்றாராம்.''
''புலவர் வாக்குக்கு இப்படியரு பலாபலனா?'' என்று நாம் சொல்லி முடிக்குமுன்பே அறிவாலயத்தின் அடுத்த மூவ்களை அடுக்க ஆரம்பித்தார் கழுகார்.
''இந்தக் கட்சி மாறல் கபடியில் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தெரிந்தாலும் உள்ளூர ஒரு சிங்கிள் ஜோதிடரின் வாக்கு பற்றி ஆளுங்கட்சி வட்டாரத்து முக்கியஸ்தர்கள் சிலர் நகம் கடிக்க ஆரம்பித் திருக்கிறார்களாம்! செல்வமான ஒரு ஜோசியக் கிளி கிளப்பிய கிலியாம் அது.''
''காளஹஸ்தி கோபுரமே தரைமட்டமாகும் காலம். கொஞ்சம் ஜாதகம், ஜோசியம் பார்ப்பார்கள்தானே...'' என்றோம் பொதுவாக.
''ம்! தலைமைக்கு மிகமிக வேண்டிய ஒரு உறவுப் பெண்மணிதான் ஆர்வக் கோளாறில் ஜாதகக் கட்டங் களைக் காட்டி செல்வ ஜோதிடரிடம் விவாதித்தாராம். அந்த ஜோதிடரோ, எதிர்முகாமின் ஜாதகத்தை எடுத்துப் போட்டு... சில ராசி - நட்சத்திரங்களைப் புரட்டிப் போட்டாராம். 1991 மற்றும் 2001 என்று 1-ல் முடிகிற வருடங்கள் போயஸ் தோட்டத்துக்கு சாதகமாக இருந்ததைத் தொட்டுக் காட்டினாராம். '1996-ல் ஆட்சிக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு தி.மு.க. தராத நல்லாட்சியா? இப்போது போலவே அப்போதும் எத்தனையோ நலத்திட்டப் பணிகளைத் தரவில்லையா? அதையும் தாண்டி 2001-ல் மறுபடி அம்மையார் ஜெயித்தபோது, அந்தக் கட்சிக்காரர்களில் பலரே தங்கள் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொள்ளவில்லையா? அப்படித்தான், 2011-ல் தேர்தல் நடத்தினாலும் முடிவுகள் அமையும்' என்று சில கூட்டல் கழித்தல்களை போட்டாராம் ஜோதிடர்!''
''சரியாப் போச்சு!''
''விட்டுத் தள்ளுகிற விஷயமா ஆட்சிப் பொறுப்பு? ஜோதிடம் கேட்ட பெண்மணி இதை நேரடியாக பெரியவர்களிடம் சொல்ல முடியாமல் தவித்தாலும்... உடன்பிறப்புகள் சிலரிடம் கவலையாக விவாதித்தாராம். உலகத் தமிழ் மாநாடு முடிந்தபின், 2010 இறுதிக்குள் தேர்தல் என்று எப்படியாவது மேலிடத்தை இறுதி செய்ய வைக்கும் வேலைகள் நடக்கிறதாம். தமிழக தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தாவின் பேச்சும் போக்கும், சீக்கிரமே தேர்தல் நடத்த சாதகமாக இருக்குமா என்ற விவாதமும் சூடாகவே நடக்கிறதாம் ஆளுங்கட்சி குடும்ப வட்டாரங்களில்!''
''ஹையோ... ஹையோ!'' என்றோம் குறுஞ்சிரிப்போடு!
''ராஜ்யசபா ஸீட் எப்படியும் வைகோவுக்கு உண்டு என்று பேசினோம்... இப்போது ரெண்டு ஸீட்டும் தங்களுக்கே என்று அம்மையார் சொல்லியிருப்பதைப் பார்த்தீரா?'' என்றார் கழுகார்.
''இது உம்மிடம் நாங்கள் கேட்க வேண்டிய கேள்வி!'' என்று முறைத்தோம்.
''கடைசி நேரம் வரை வைகோவுக்கு வழங்கவே ஜெயலலிதா தயாராக இருந்தாராம். வைகோவின் அரசியல் வளர்ச்சியில் அக்கறைகொண்ட இளம் வாரிசு ஒருவரும், போயஸ§க்கு வேண்டிய வட்டாரங் கள் மூலம் ஸீட்டை உறுதிப்படுத்தினாராம். 'அப்படியிருக்க எப்படி இப்படி?' என்று எனக்கும் குழப்பம்தான். ம.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தால், கடைசி நிமிடத்தில் எங்கள் பொதுச் செயலாளரின் முடிவு மாறியிருக்கிறது. கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்பார்ப்புகளின்படி, மாநில அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த அவர் விரும்புகிறார். அதோடு, ராஜ்யசபா ஸீட்டை விட்டுக் கொடுப்பதன் மூலம் வேறு சில வாய்ப்புகளையும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்வோம்' என்கிறார்கள். எப்படியோ, 'நான் ராஜ்ய சபாவுக்கு முயன்றது மீடியாக்களின் கற்பனை' என்று சொல்லி, இப்போதைய விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் வைகோ!''
''சரிதான்!''
''இப்போதிருக்கும் மூன்று எம்.பி-க்களோடு ராஜ்ய சபாவில் அ.தி.மு.க-வுக்கு இன்னும் இரு எம்.பி-க்களும் கிடைத்தால் அந்தக் கட்சிக்கு முன் வரிசையில் அங்கே இடம் கிடைக்குமாம். மத்திய அரசு அமைக்கும் குழுக்களில், விவாதங்களில் இடம்பெறத் தகுதியும் கிடைக்குமாம். இதையெல்லாம் மனதில்கொண்டு வைகோ மற்றும் கம்யூனிஸ்ட்களை கடைசி நேரத்தில் கூப்பிட்டு சரிப்படுத்திவிட்டார் அம்மையார் என்றும் சொல்கிறார்கள்!''
சற்று அமைதி. பிறகு,
''காலாவதி மருந்து மாத்திரை விவகாரத்தில் குண்டர் சட்டமெல்லாம் பாய்ச்சி ஜோராகத்தான் முன்னேறுகிறது போலீஸ். ஆனால், மத்தியில் செல்வாக்கான பதவியில் உள்ள தமிழக கதர் புள்ளி ஒருவர் விவகாரத்தை ஆறப் போடச் சொல்லி பிரஷர் கொடுக்கிறாராம். அதையும் தாண்டி போலீஸ் காட்டிய வேகத்தில் அசந்துபோனவர், 'வழக்கை சி.பி.ஐ-யின் கையில் ஒப்படைத்துவிட்டு விலகுங்கள்' என தமிழக ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கும் பரிவான வேண்டுதல் வைத்தாராம்.''
''என்ன ஆகும் கடைசியில்?''
''இந்த மத்திய புள்ளிக்கும், தி.மு.க. தரப்புக்கும் இடையே நடக்கும் மோதலை ஊன்றிக் கவனித்த அ.தி.மு.க. தலைகள் சிலர், அதை அம்மையாரின் கவனத்துக்குக் கொண்டுபோனார்கள். அடுத்த நாளே, 'காலாவதி மருந்து விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்' என அம்மையாரிடம் இருந்து அதிரடி அறிக்கை வந்தது. இதில் மத்திய புள்ளியின் மனசு ரொம்பவே குளிர்ந்துபோனதாம். என்னவிதமான மூவ் இது என்று புரியாமல் ரத்தத்தின் ரத்தங்களே சற்று குழம்பித்தான் போயிருக்கிறார்களாம்! இது ஒருபுற மிருக்க... கைதான கேதன் தேசாய் விவகாரத்தில் ஒரு தமிழக கைத்தடி சொல்லும் தகவல்களைக் கேட்டு சி.பி.ஐ. ஆடிப் போயிருக்கிறதாம். அங்கே தொட்டு... இங்கே தொட்டு... டெல்லியில் பவரில் இருந்த - இருக்கும் நான்கு முக்கியப் பிரமுகர்களைப் பற்றி வசமான கோப்புகளை சீக்கிரமே சி.பி.ஐ. கைப்பற்றி விடும் என்கிறார்கள்!''
''இது என்ன ஆகும்?'' என்றோம் மறுபடி.
''அரசியலில் பலசமயம் உண்மைகள் பேரத்துக்கே பயன்படும்!'' என்று புதிர் தத்துவம் சொன்னகழுகார்,
''கடந்த 26-ம் தேதி சேரன்மகாதேவி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான வேல்துரையின் மகனுக்குத் திருமணம்... அதில் கலந்துகொள்ள துணை முதல்வர் ஸ்டாலின் 25-ம் தேதி இரவு மதுரை விமான நிலையத் துக்கு வந்தார். அவருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு ஆகியோரும் வந்தனர். மதுரையில் அவரை வரவேற்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. அழகிரி ஆதரவாளர்கள் அத்தனை பேரும் சொல்லிவைத்தாற்போல ஆப்சென்ட். வேலுசாமி, பொன்.முத்துராமலிங்கம் மட்டும் வந்திருந் தார்கள். இந்த 'பாய்காட்'டை ஸ்டாலின் முன்கூட்டி எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ... 'எதுக்கு நீங்க மட்டும் மெனக்கட்டு வந்தீங்க. உங்களுக்கு ஏதாவது பிரச்னை ஆகிடப்போவுது!' என்று சிரித்தாராம். 'இல்லைண்ணே... எல்லாரும் வெளியூர் போயிட்டாங்க' என்று அவர்கள் சமாளிக்க, 'சரி... நீங்க கிளம்புங்க' என்றபடியே காரில் ஏறிக் கிளம்பிவிட்டாராம் ஸ்டாலின். நெல்லையில் ஸ்டாலினின் தீவிர விசுவாசியான கருப்பசாமி பாண்டியன் தலைமையில் தடபுடல்வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அங்கேயும் அழகிரி ஆதரவாளரான மாலை ராஜா க்ரூப் ஆப்சென்ட்!''
''யப்பா... இவங்க கதையை புரிஞ்சுக்கவே முடியாது!''
''20 நாள் பயணமாக அமெரிக்கா போன அழகிரியிடம் போனிலும் நேரிலுமாக சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாம். முதல்வரின் மகள் செல்வி, அமெரிக்காவுக்குப் போய் துரை தயாநிதியிடமும் மணிக்கணக்கில் பேசினாராம். 'தயா' சேனல் முயற்சிகளை தவிர்க்கும்படி வேண்டுகோள் வைக்கப்பட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். அத்தையின் மனம் கோணக் கூடாது என்பதற்காக தயாவும் அப்போதைக்கு தலையாட்டிவைத்தாராம். இதற்கிடையில், தயாவின் பிசினஸ் பார்ட்னரான 'ஜாக்' கம்யூனிகேஷன்ஸ் கமலேஷிடமும் சிலர் 'பன்முகம்' காட்டிப் பேசினார்களாம். முயற்சிகள் தொடர்கின்றன!''
அச்சுக்குப் போகவிருந்த ஜூ.வி-யின் பக்கங்களை புரட்டிப் பார்த்த கழுகாருக்கு திருமாவளவனின் பேட்டி கண்ணில் பட்டது. ''எம்.பி. ஸீட் பெறுவதில் இதுவரை வெளிப்படையாகப் பேசாத மருத்துவர் ராமதாஸ், சமீபத்தில் ஒரு திருமண விழாவில் தன் மனக்கிடக்கையைக் கொட்டிவிட்டாராம். 'அன்புமணி மத்திய அமைச்சராக இருந்து மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர். அவரைப்போன்ற இளைஞர்கள் டெல்லிக்குப் போனால்தான் தமிழகத்துக்கு நல்லது நடக்கும். மகன் என்பதற்காகவோ கட்சிப் பாசத்திலோ நான் இதைச் சொல்லவில்லை. திறமையான இளைஞர் என்பதற்காகத்தான் சொல்கிறேன். ஆனால், அன்புமணிக்கு ராஜ்யசபா ஸீட் கிடைத்துவிடக் கூடாது என்பதில் பலர் தீவிரமாக இருக்கிறார்கள்' எனப் பேசியவர் அவர்கள் யார் என்பதையும் சொல்லத் துணிந்தாராம். அதற்குள் சுற்றி இருந்தவர்கள் ஏதோ சொல்லி மருத்துவரின் பேச்சைத் திசை திருப்பினார்களாம்'' என்றபடியே சிறகுகளைச் சிலுப்பி டேக்_ஆஃப் ஆனார் கழுகார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment