Monday, May 31, 2010
செவன் ஸ்டார் தியேட்டரை முதல்வர் கருணாநிதியை வைத்து திறந்தி ருக்கிறார் அபிராமி ராமநாதன்
ஓட்டல்களில்தான் ஃபைவ் ஸ்டார் ஓட்டல், த்ரீ ஸ்டார் ஓட்டல் என்று உண்டு. அபிராமி ராமநாதன் திரையரங்குகளிலும் ஸ்டார் அந்தஸ்தை ஏற்படுத்தி புரட்சி செய்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு படுத்துக் கொண்டே படம் பார்க்கும் ஃபைவ் ஸ்டார் தியேட்டரை அபிராமி மால் தியேட்டரில் திறந்தார். அதை ஸ்டாலின் துவக்கி வைத்தார். இப்போது செவன் ஸ்டார் தியேட்டரை முதல்வர் கருணாநிதியை வைத்து திறந்தி ருக்கிறார்.
இந்தத் தியேட்டரில் படுத்துக் கொண்டு படம் பார்ப்பது போக, இருக்கையில் உட்கார்ந்து படம் பார்க்கும் போது உடம்பை இதமாகப் பிடித்து விடும் (மசாஜ்) வசதி உள்பட பல வசதிகள் உள்ளன. அது மட்டுமா? இனி நீங்கள் படம் பார்க்க தியேட்டருக்குப் போக ஆட்டோக்காரர்களோடு பேரம் பேசி மல்லுக்கட்ட வேண்டாம். அபிராமி தியேட்ட ருக்குப் போன் பண்ணினால் போதும். கார் வந்து உங்களை தியேட்டருக்கு அழைத்து வந்துவிடும். படம் முடிந்ததும் திரும்ப வீட்டுக்கு வந்து விட்டுவிடுவார்கள்.
இந்த நவீன வசதி கொண்ட திரை யரங்கை புரொஜக்டரை இயக்கித் துவக்கி வைத்துப் பேசிய முதல்வர் தனது பழைய நினைவுகளை அசை போட்டு, இன்றைய விஞ்ஞான வளர்ச்சியைப் பாராட்டினார்.
மணலிலே உட்கார்ந்து படம் பார்த்த காலம்... பேசும் படம் வராத காலத்தில் ஊமைப் படம் ஓடிக் கொண்டிருக்க, பின்னாலிருந்து ஒருவர் காட்சிக்கேற்ப வசனங்களைப் பேசிய காலம்... இப்படி படிப்படியாக திரைத்துறையில் விஞ்ஞான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று கூறிய முதல்வர், ""ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்க ஒப்புக் கொண்டாரென்றால், பாட்டை எழுதிக் கொடுத்து விட வேண்டும். அவர் எங்கோ ஒரு நாட்டில் இருப்பார். அங்கி ருந்து ட்யூன் போடுவார். அதற்கு வீணை ஒலிப்பதிவு சுவிட்சர்லாந்திலிருந்து வரும். குரல் பதிவு லண்டனிலிருந்து வரும். அதை நாம் சென்னையிலே இணைப்போம். இந்த வளர்ச்சியை எல்லாம் பார்ப்பது இந்த வயது வரை இருப்பதால்தானே!'' என்று கலைஞர் விஞ்ஞானம், சமூகம், தனது வயது எல்லாம் இணைத்துப் பேசி நெகிழ்ந்தார்.
""திரையரங்கு ஒன்றுதான் பொழுது போக்கு என்றிருந்த காலமுண்டு. இப்போது அப்படி அல்ல! பொழுதுபோக்க பல வழிகள் வந்துவிட்டன. அதனால் ரசிகர்களை வரவழைக்க வேண்டு மானால் தியேட்டர் வசதியாக இருந்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஆள் பாதி; ஆடை பாதி என்பதுபோல் படம் பாதி; தியேட்டர் பாதி என்று ஆகி விட்டது'' என்றார் அபிராமி ராமநாதன்.
""சுவிட்சர்லாந்தை சென்னைக்குக் கொண்டு வந்ததுபோல் மருட்சியாக இருக்கிறது'' என்று பிரமித்தார் பாலசந்தர்.
வழக்கம்போல் வைரமுத்து, ""அபிராமி ராமநாதனின் பேத்தி இங்கே கடவுள் வாழ்த்து பாடினார். அப்போது 60 சதவிகிதம் பேர்தான் எழுந்து நின்றார் கள். ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியபோது 100 சதவிகிதம் பேர் எழுந்து நின்றார்கள். கடவுளைவிட தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் கலைஞர்தான்'' என்று முதல்வரை தமிழின் பேரால் குளிர் வித்தார்.
அபிராமி ராமநாதனின் புதுமை ஆர்வம் பாராட்டத்தக்கதுதானே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment