Sunday, May 30, 2010
வெல்லப்போவது யார்?
பிரேசில் சிறைக் கைதிகள் டி.வி. கேட்டு ரகளை செய்கிறார்கள். 'இந்த வாட்டி வாங்கலைன்னா உங்களுக்கு இருக்குடி' என்று இங்கிலாந்து மக்கள் பல்லைக் கடிக்கிறார்கள். பல நாடுகளைச் சேர்ந்த 40 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் ஃப்ளைட் டிக்கெட் எடுத்துவிட்டார்கள். ஆம்! உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான, உலகக் கோப்பை கால்பந்து நிகழும் மங்களகரமான ஜூன் மாதம் சுபயோக சுபதினமான 11-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இனிதே துவங்க இருக்கிறது.
கால்பந்து வரலாற்றில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உலகக் கோப்பை போட்டி நடப்பது இதுவே முதல் முறை.
உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடத் தகுதி பெறுவதே பெரிய சாதனை. உலகக் கால்பந்து சம்மேளனத்தில் (சுருக்கமாக ஃபிஃபா) 208 நாடுகள் உறுப்பினர்கள். பல தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாடி கடைசியாக 31 நாடுகள் தேர்ந்தெடுக்கப்படும். போட்டியை நடத்தும் நாடு ஜம்மென்று ஷார்ட் கட்டில் வந்துவி(ளையா)டலாம். ஆக மொத்தம் 32. இந்த முறை உலகக் கோப்பையைக் கைப்பற்ற பிரேசில், ஸ்பெயின், இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகள் முட்டி மோதுகின்றன. யாருக்கு வாய்ப்பு அதிகம்?
பிரேசிலின் ஸ்டார் பிளேயர்களாக இருந்த ரொனால்டோ, ரொனால்டினோ இருவருமே இப்போது பிரேசில் அணியில் இல்லை. கால்பந்தைப் பொறுத்தவரை 30 வயதைத் தாண்டினாலே, வயசாயிருச்சுப்பா என்று ஒதுக்கிவிடுவார்கள். ரொனால்டோவுக்கு வயது 33. ரொனால்டினோ, இப்போது நம்ம ஊர் யுவராஜ் சிங் மாதிரி 'பார்ட்டி பாஸ்' ஆகிவிட்டார். 'பாரில் சார் விழுந்துகிடக்கிறார்' என்று தினமும் செய்தி வர, பிரேசிலின் கோச் துங்கா, அவருக்குக் கல்தா கொடுத்துவிட்டார். இத்தனை பிரச்னைகள் இருந்தாலும், ரசிகர்களுக்கு இன்னும் பிரேசிலின் மீது நம்பிக்கை குறையவில்லை. நட்சத்திர வீரர்களான காகா, ரோபின்கோவின் படுவேகமான ஆட்டம், டீம் ஒருங்கிணைப்பு என பிரேசில் அணியின் பாஸிட்டிவ் விஷயங்கள் அதிகம்.
இங்கிலாந்து அணிக்கு இப்போதைய பிரச்னையே, பெண்கள்தான். இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்தவர் ஜான் டெர்ரி. அணியின் இன்னொரு வீரரான வேயர்ன் பிரிட்ஜின் காதலி வென்னசாவுக்கும், ஜான் டெர்ரிக்கும் ரகசிய சிநேகிதம். இதனால், வென்னசா கர்ப்பம் அடைய, ஜான் டெர்ரி 20 ஆயிரம் பவுண்டுகள் செலவழித்துக் கருவைக் கலைத்துவிட்டார். விஷயம் வெளியே கசிய, நொந்துபோன வேயர்ன் பிரிட்ஜ், 'உலகக் கோப்பை அணிக்கு என்னைத் தேர்வு செய்ய வேண்டாம்' என்று கால்பந்தையும் காதலியையும் கைகழுவிவிட்டார். ஒன்றைப் பத்தாக்குவதுதானே வதந்தி. ஜான் டெர்ரிக்கு இப்படிப் பல பெண்களுடன் தொடர்பு என்று கதை. விளைவு... அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டார்கள்.
'வீரர்கள், தங்களின் மனைவியையோ, காதலியையோ, தென் ஆப்பிரிக்காவுக்குக் கூட்டிக் வரக் கூடாது' என்று உத்தரவு போட்டு இருக்கிறார்கள். அணியின் நட்சத் திர வீரரான டேவிட் பெக்காமுக்கு 35 வயது ஆகிவிட்டாலும், ஃபிட்னெஸ் சரியாக இருந்ததால், அணியில் இருந்தார். இதுவரை மூன்று உலகக்கோப்பை போட்டி களில் ஆடியிருக்கிறார். இங்கி லாந்து கால்பந்து வீரர்கள் யாரும் நான்கு உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடியது இல்லை. அந்தச் சாதனையை பெக்காம் செய்வார் என்று காத்திருக்கும்போது, சோதனை. காலில் அடிபட்டு, ஆபரேஷன் வரை போனதால் அணியில் இடம் இல்லை. 'இங்கிலாந்து அணியின் இன்ஜின்' வைனி ரூனியும், காதல் விவகாரங்களை மறந்துவிட்டு ஜான் டெர்ரியும் ஒழுங்காக ஆடும்பட்சத்தில், அணி வெற்றிக் கொடி கட்டும்.
கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படும் இன்னொரு நாடு... ஸ்பெயின்! சமீபமாக ஸ்பெயின் அணி பெற்று வரும் தொடர் வெற்றிகள், அந்த அணியைப் பந்தயப் பட்டியலில் சேர்த்திருக்கிறது. கிரிக்கெட்டில் இந்திய அணி மாதிரி, கால்பந்தில் ஸ்பெயின். எந்த நேரம் எப்படி ஆடுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. ஸ்பெயின் அணியின் பெர்னாண்டோ டாரஸ் எப்போதும் எதிரணிக்கு பாஸ்பரஸ். கால்பந்தில் எதிரணியின் நல்ல வீரர்களைத் தடுக்க, சமாளிக்க, தங்கள் அணியில் ஒருவரை நியமிப்பார்கள். ஆனால், டாரஸ§க்கு இரண்டு, மூன்று வீரர்களை நியமிக்க வேண்டும். தன் காலுக்குப் பந்து வந்த உடனேயே, எங்கே இருந்தாலும் கோல் போஸ்ட்டைப் பார்த்து அடித்துவிடுவார். நிகழ்தகவின்படி நாலு முறைக்கு ஒரு கோல் விழுந்தாலும் கதை கந்தலாகிவிடுமே. அந்தப் பயம் மற்ற அணிகளுக்கு உண்டு. அவரை முடக்கிவிட்டாலே ஸ்பெயினுக்கு பெயின் வந்துவிடும்.
கால்பந்து விளையாட்டின் கறுப்பு ஆடு... நெதர்லாந்து அணி. அர்ஜான் ராபின், ரூபின் வான்பஸி என நட்சத்திர வீரர்கள் இருக்கிறார்கள். எல்லா வீரர்களுமே நன்றாக விளையாடுவது நெதர்லாந்தின் ப்ளஸ். கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணி மாதிரி, கால்பந்தில் நெதர்லாந்தைச் சொல்வார்கள். காரணம், அதன் துரதிர்ஷ்டம். இரண்டு முறை உலகக் கோப்பை ஃபைனல் வந்தும், நெதர்லாந்தால் கோப்பையைத் தட்ட முடியவில்லை. அதிர்ஷ்ட தேவதை கடைக்கண் பார்வை பார்த்தால், நெதர்லாந்து மலையேற வாய்ப்பு உண்டு.
அர்ஜென்டினாவின் வெற்றிக் கனவு அதன் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸியிடம் இருக்கிறது. 22 வயது மெஸ்ஸியின் ஸ்டைல், அப்படியே மரடோனா. அடுத்த மரடோனா என்று புகழ்வதை, அணியின் கோச் மரடோனாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். சீனியரும் ஜூனியரும் சேர்ந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினாவுக்கு பெற்றுத் தருவார்கள் என்று நாடே காத்திருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, அந்த அணிக்காக 188 போட்டிகளில் விளையாடி 88 கோல்கள் அடித்திருக்கிறார். அர்ஜென்டினாவுக்காக, 44 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 13 கோல்களை அடித்திருக்கிறார். பார்சிலோனாவில் ஜொலிக்கும் மெஸ்ஸி, தாய்நாட்டுக்காக விளையாடும்போது சொதப்பிவிடுகிறார் என்பது குற்றச்சாட்டு. இந்த வருடம் சிறந்த கால்பந்து வீரருக்கான 'ஃபிஃபா' விருதினை மெஸ்ஸி வாங்கியிருப்பதால், நம்பிக் காத்திருக்கிறார்கள் அர்ஜென்டினா மக்கள்.
அணியைத் தனி ஆளாக வெற்றிக்கு அழைத்துச் செல்லும் வீரர்கள் அத்திப் பூத்ததுபோல்தான் கால்பந்தில் உருவாவார்கள். பீலே, மரடோனா போன்ற ஜாம்பவான்களுக்கு அடுத்து, அந்த வரிசையில் இடம் பிடித்திருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் அணியின் கேப்டன். சிறந்த வீரருக்கான ஃபிஃபா விருதை இரண்டு முறை தட்டி வந்தவர். உலகின் விலை உயர்ந்த கால்பந்து வீரர். சமீபத்தில், ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கிளப் 93 மில்லியன் பவுண்டுக்கு இவரை ஒப்பந்தம் செய்தது. போர்ச்சுக்கல் அணி இது வரை உலகக் கோப்பையை வென்றது இல்லை. இந்த வருடம் வெல்லப்போகும் அணிகளின் பட்டியலிலும் இல்லை. ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மந்திரக் கால்கள் அடிக்கும் தந்திரக் கோல்களால் போர்ச்சுக்கலின் எதிர்காலம் எழுதப்படலாம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment