Saturday, May 29, 2010

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும்! முத்துசாமியின் மனம் திறந்த மடல்!


அ.தி.மு.க.வில் தொடர்ந்து குமுறல்கள் வெடித்துக்கொண்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டு காலத்தில் மட்டும் மேற்கு மதுரை எம்.எல்.ஏ.வாக இருந்த சண்முகம் தொடங்கி, மாஜி மந்திரிகள் செல்வ கணபதி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் ஜெயங்கொண்டம் ராஜேந்திரன், கோயில்பட்டி ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர் என பலரும் அ.தி.மு.க.வுக்கு முழுக்குப் போட்டுவிட்டு தி.மு.க.வில் ஐக்கியமானபடியே இருக்கிறார்கள்.

இந்தப் பட்டியலில்... கட்சியின் அமைப்புச் செயலாளரும் மாஜி மந்திரியுமான முத்துசாமியும் இடம்பிடிக்கப்போகிறார். கலைஞர் தலைமையில் மாஜி எம்.பி. கரூர் வி.கே.சின்னசாமி, மாஜி எம்.எல்.ஏ.க்கள் அந்தியூர் மாதையன், ஏ.டி.சரஸ்வதி, பூந்துறை பால கிருஷ்ணன், ஈரோடு மாணிக்கம் மற்றும் ஒ.செ.க்கள், ந.செ.க்கள், கி.செ.க்கள் உள்ளிட்ட பெரும்படையோடு தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொள்ள இருக்கிறார்.

புதன்கிழமை கட்சியின் தலைமை அலுவலகத் துக்கு வந்த ஜெ., ""முத்துசாமிக்கு என்ன பிரச்சினை, என்ன குறை என்பது எனக்குத் தெரியவில்லை. அவருக்கு என்ன குறை உள்ளது என்பதை அவர் எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்தித்துப் பேசலாம். பேச்சு வார்த்தையின்போது குறைகளைத் தீர்த்து கொள்ளலாம். என்னைப்பொறுத்தவரை ஒன்றரை கோடி உறுப்பினர்களில் நான் யாரையும் இழக்க விரும்பவில்லை'' என்று இறங்கி வந்து கருத்து வெளியிட்டிருக்கிறார்.

முத்துசாமியின் இந்த திடீர் முடிவின் பின்னணி என்ன? இது குறித்து முத்துசாமியின் ஆதரவாளர்களிடம் நாம் கேட்டபோது ""கடந்த 33 வருடங்களாக அண்ணன் அ.தி.மு.க.வுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார். 91-ல் அண்ணனுக்கு அமைச்சர் பதவி கொடுத்த ஜெ., செங்கோட்டையனின் பேச்சுக்களை கேட்டு... அண்ணனை ஓரம்கட்ட ஆரம்பித்தார். அதே சமயம் செங்கோட்டையனை ஓரம்கட்டத் துடிக்கும் சசிகலா, முத்துசாமியை முழுமையாக ஆதரித்துவருகிறார். எனினும் ஜெ.வோ செங்ஸுக்கு முக்கியத் துவம் கொடுக்கிறார். அவர் பேச்சைக்கேட்டுக்கொண்டு... 2001-லும் 2006-லும் சீட் கொடுக்காமல் அண்ணனை ஓரம்கட்டினார். இப்படி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால்.... தற்போது ஒரு நல்ல முடிவை நோக்கி நகரத் தொடங்கி விட்டார். அதாவது தி.மு.க.வில்தான் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார்''’ என்கிறார்கள் உற்சாகமாக. பிறகு?

“கடந்த ஒரு மாதமாகவே ஐசரி கணேஷ்தான் பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து முத்துசாமி தனது மகன் ராஜா மூலம்... துணை முதல்வர் ஸ்டாலினின் மகனான உதயநிதியிடம் தனது விருப்பத்தைக் கொண்டு போனார். கட்சியில் இணைத்துக்கொள்ள ஸ்டாலின் கிரீன் சிக்னல் காட்டியதோடு... ஒரு ஓட்டலில் முத்துசாமி யை நேரிலும் சந்தித்தார். இருவரும் சில நிமிடங்கள் மனம்விட்டுப் பேசினார்கள். பின்னர்... முத்துசாமியிடம்... "அ.தி.மு.க.வின் சீனியர் லீடர் நீங்கள். உங்கள் முடிவு மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களுக்குரிய மரியாதை தி.மு.க.வில் எப்போதும் கிடைக்கும்' என ஸ்டாலின் சொல்ல ஏக மகிழ்ச்சியில் இருக்கிறார் முத்துசாமி’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். 26-ந் தேதி மாலை ஒரு முடிவோடு கிங் ஃபிஷர் ஃபிளைட்டைப் பிடித்து சென்னை வந்தார் முத்துசாமி.

தன்னை ஏர்ப்போர்ட்டிலேயே மடக்கிய நிருபர் களிடம் ""நான் என் மனக்குறைகளை ஒரு கடிதமாக ஜெ.’வுக்கு எழுத இருக்கிறேன். இதற்கு ஜெ.வின் பதில் என்ன என்பதைப் பொறுத்தே எனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்’ என்று சின்னதாக சஸ்பென்ஸ் வைத்துவிட்டு தனது செனாய்நகர் வீட்டிற்கு விரைந்தார். இந்த நிலையில் சென்னைக்கு கிளம்பும் முன்பாகவே முத்துசாமிக்கு தொலைபேசியில் வந்த ஜெ., நேரில் பேசலாம் வாங்க என அழைத்தார். அதோடு... முத்துசாமியை சமாதானப்படுத்த சசியின் உறவினர்களான ராவணன், கலியபெருமாள் போன்றோர் தொடர் முயற்சி எடுத்தும் அவர் பிடிகொடுக்கவில்லை.





ஜெ.வுக்கு முத்துசாமி எழுதியிருக்கும் 14 பக்க கடிதத்தின் சாராம்சம் இதுதான்...

அன்புள்ள பொதுச்செயலாளர் அம்மா அவர்களுக்கு,

கழக அமைப்பு செயலாளர் முத்துசாமி எழுதிக் கொண்டது. உங்களை பார்த்தால் எங்களைப் போன்றவர் களுக்கு பேச்சு வராது. அதனால்தான் இந்த கடிதம்.

நான் 38 வருடகால அ.தி.மு.க.காரன். அப்படிப்பட்ட என்னை 96-ல் உண்மையறியாமல் கட்சியை விட்டு நீக்கினீர்கள். அப்போது செங்கோட்டையன், கண்ணப்பன், ரகுபதி மூவரையும் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று பத்திரிகைகளுக்கு நான் தகவல் கொடுத்ததாக செங்கோட்டையன் உங்களிடம் சொன்னதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்தீர்கள். ஆனால், நான் அப்படி சொல்லவேயில்லை. அப்போது நான் அம்மா வீட்டில்தான் கட்சிக்காக ஒரு அறிக்கை தயார் செய்துகொண்டிருந்தேன். நீங்கள் என் னைக் கூப்பிட்டீர்கள். ""என்ன மிஸ்டர் முத்துசாமி, என் வீட்டில் இருந்துகொண்டே பத்திரிகைகளுக்கு செய்தி கொடுப்பீர்களா?'' என்று கேட்டீர்கள். அது தவறான தகவல் என்பதையும் நான் எந்தச் செய்தியையும் கொடுக்கவில்லை என்றும் சொன்னேன். என்னையும் என் பதிலையும் உதாசீனப்படுத்தினீர்கள். நான் வருத்தத் தோடு வந்துவிட்டேன். அன்றே நடந்த செயற்குழுவில் என்னைக் கட்சியை விட்டு நீக்கினீர்கள்.

அதற்குப் பிறகு நான் கட்சியில் சேர்ந்தபோதும், என்னை ஜானகி அணி என்று புண்படுத்தும் போக்கு தொடர்ந்தது. ஆனாலும் கட்சிக்காக நான் தொடர்ந்து பாடுபட்டேன். கட்சி நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொண்டேன்.

சமீபத்தில் தீக்குளித்த அ.தி.மு.க. தொண்டர் தங்கவேல் அவர்களுக்கு நிதியளிக்க நீங்கள் ஈரோடு வடக்கு மாவட்டத்துக்கு வந்திருந்தீர்கள். அந்த மாவட்டம் எனது பொறுப்பின் கீழ் உள்ள மாவட்டம். அந்த மாவட்டத்திற்கு தாங்கள் வருகிறீர்கள் என ஆர்வமுடன் வந்த என்னை நீங்கள் ஏறெடுத்தும் பார்க்க வில்லை.

நான் நான்குமுறை கையெடுத்து கும்பிட்டேன். நீங்கள் அதை ஏற்கவில்லை.

எம்.ஜி.ஆர். கட்சித் தலைவராக இருந்தபோது ஒரு ஊரில் இரண்டு தலை வர்களுக்கிடையே போட்டி என்றால் இருவரையும் தட்டிக் கொடுத்து அணைத்து கொண்டு போய் இருவருக்கும் தனது வீட்டில் சாப்பாடு போட்டு சமாதானத்துடன் கூடிய போட்டியை வளர்ப்பார். நீங்கள் அப்படி நடந்து கொள்ள மாட்டேன்கிறீர்கள். இதுதான் அவருக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம். பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத் திருமணத்தில் பேசிய நீங்கள் மக்கள் எனக்கு ஓட்டு போட்டார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள் துரோகம் செய்து விட்டார்கள் என்று பேசினீர்கள். அ.தி.மு.க. தொண்டன் துரோகம் செய்திருந்தால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் மெகா கூட்டணியை எதிர்த்து இத்தனை இடங்கள் நாம் வெற்றி பெற்றிருக்க முடியுமா?

எம்.ஜி.ஆர். என்ற மந்திர சொல்லில் இன்றும் மயங்கிக் கிடக்கும் அ.தி.மு.க. தொண்டனை அவரை மறக்க சொல்வது போல உங்கள் அணுகுமுறை உள்ளது.

""1984-லேயே அ.தி.மு.க. முடிந்து விட்டது. நான்தான் அதற்கு உயிர் கொடுத்தேன் என்றும் மக்கள் எம்.ஜி.ஆரின் பெயருக்கு ஓட்டு போடவில்லை எனக்குதான் ஓட்டு போடுகிறார்கள்'' என்று கட்சி நிர்வாகிகளிடம் தனிப்பட்ட முறையில் பேசுகிறீர்கள்.

ஜா., ஜெ. என கட்சி இரண்டாக பிரிந்து இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு தேர்தலில் தோற்றுப் போன சமயம். அன்று இரண்டு அணிகளை ஒன்று சேர்க்க என்னிடம் நீங்கள் பேசியபோது, எம்.ஜி.ஆரின் புகழையும் இரட்டை இலையையும் வாழ வைப்பேன் என உறுதியளித்தீர்கள்.

உங்கள் உறுதிமொழியை உண்மை என்று நம்பிய நான் ஜானகி அம்மையாரிடம் போய் பேசினேன். நான் அன்று உங்களுக்கு ஆதரவாக பேசியதை இன்று அமைச்சர்களாக உள்ள எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன் போன்றோரெல்லாம் எதிர்த்தார்கள்.

அப்பொழுது ஜானகி அம்மையாரிடம் எம்.ஜி.ஆரின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டுமென்றால் இரட்டை இலை சின்னம் வேண்டும். தலைவியாக ஜெ. ஆகிய நீங்கள் வர வேண்டு மென உறுதி தந்தேன். எனது இந்த முயற்சிகளை பாராட்டி 91-ல் கழக அரசு அமைத்தபோது அமைச்சராக்கினீர்கள். நான் ஜானகி அம்மையாருக்கு கொடுத்த எம்.ஜி.ஆர். புகழ் நிலைக்கும், அதை தூக்கி பிடிப்பீர்கள் என்கிற வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு விட்டீர்கள். 15 வருடமாக எம்.எல்.ஏ சீட், எம்.பி. சீட் வேண்டுமென்று கேட்கவில்லை. எனக்கு எந்த சீட்டும் தராவிட் டாலும் கட்சி வேலையை செய்துவந்திருக்கிறேன். 38 வருட கால அரசியலில் கடந்த நான்கைந்து நாட்களில் நான் அழுதது போல எந்தச் சூழ்நிலையிலும் அழுதது கிடையாது. அந்தளவுக்கு மன உளைச்சலுக்குள்ளாகியிருக்கிறேன். எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வின் பெயர் கெட்டுவிடக்கூடாது என நினைக்கிறேன். நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் -என்ற ரீதியில் மனம் திறந்து தன் வேதனைகளை கடிதத்தில் கொட்டியிருக்கிறார் முத்துசாமி.

தொண்டர்களும் கட்சிப் பிரமுகர்களும் எளிதில் சந்திக்கமுடியாதபடி தன்னைச் சுற்றி இரும்புக்கோட்டையை அமைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார் ஜெ. இந்த நிலையை ஜெ’ மாற்றிக்கொண்டு தொண்டர்களிடம் அவர் வராவிட்டால்... கலகலத்து வரும் அ.தி.மு.க.வைக் காப்பாற்றுவதே கஷ்டம் என்கிறார்கள் கவலையில் இருக்கும் ர.ர.க்கள்.


"இழப்பு இல்லை' -செங்கோட்டையன்!



செங்கோட்டையனுக்கு எதிராக முத்துசாமிக்கு ஆதரவாக இருந்தவர் சசிகலா. இதனால் முத்துசாமி தனது கடிதத்தில் தன்னை கார்னர் பண்ணலாம் என கவலையடைந்திருக்கும் செங்கோட்டையன்... தனது ஆதரவாளர்களிடம் “""இந்த முத்துசாமி கட்சிக்கு துரோகம் பண்ணியதே இல்லையா? திருநாவுக்கரசர் போட்டி அ.தி.மு.க.வை 97-களில் ஆரம்பித்தபோது.. எஸ்.டி.எஸ், கண்ணப்பன், அரங்கநாயகம் போன்றவர் களோடு அந்த முகாமுக்கு ஓடிப்போனவர்தானே இவர். ஜெ.வை எதிர்ப்பதில் தோற்றுப்போய்... மீண்டும் அ.தி.மு.க.விலேயே சரணாகதி அடைந்தவர்தானே முத்துசாமி. அப்படியிருந்தும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று கட்சிதாவத் துடிக்கிறார் முத்துசாமி. இவர் கட்சி மாறுவதால் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை''’ என்றெல்லாம் மனம் குமைந்துகொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment