Saturday, November 28, 2009

யுத்தம் 5 -நக்கீரன்கோபால்

கிருஷ்ணாவிடம் ரஜினி என்னைக் காட்டி, ""இவர் காட்டுக்குப் போகமாட் டேன்னுதான் சொன்னார். கலைஞர்ஜி, நான், சிவாஜிசார் மூணு பேரும்தான் கம்ப்பல் பண்ணி, ராஜ்குமார் சாரை காப்பாத்திக் கொண்டுவரணும்னு அனுப்பி வச்சோம்'' என்பதை கன்னடத்தில் சொன்னார்.

கிருஷ்ணா என்னைப் பார்த்து, "yes Gopal. Tell me'' என்றார். மீட்பு முயற்சிகளின் ஆரம்பகட்டத்தி லிருந்து மூன்றாவது பயணம் வரையிலான முன்னேற்றங்களை ஆங்கிலம் கலந்த தமிழில் நான் சொல்லச் சொல்ல, ரஜினி அதை கன்னடத்தில் கிருஷ்ணாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த சந்திப்பும் பேச்சு வார்த்தையும் 2 மணி நேரம் நீடித்தது. கர்நாடக அரசின் மரியாதைகளும் தொடர்ந்தன.புல்லட் புரூஃப் கார் எதற்காக என்று முதல்வர் கிருஷ்ணாவிடம் கேட்டேன்.

அவர் இன்டலிஜன்ஸ் ஏ.டி.ஜி.பி. ஜெயப்பிரகாஷைப் பார்த்து, ""அவருக்கா ஹேலி'' (tell him) என்றார் கன்னடத்தில்.ஜெயப்பிரகாஷ் நன்றாகத் தமிழ் பேசுவார். ""ராஜ்குமார் சாரை நீங்க காப்பாத்துறது இங்கே சிலருக்குப் பிடிக்கலை. அவருக்கு ஏதாவது ஒன்று நடந்தால் இங்கேயும் ஆட்சி இருக்காது. தமிழ்நாட்டிலும் ஆட்சி இருக்காது. நல்லது நடக்கக்கூடாதுன்னு நினைக்கிறவங்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனாலதான் உங்களுக்கு இத்தனை பாதுகாப்பு + புல்லட் புரூஃப் கார்'' என்று விளக்கினார்.அந்த அறையின் ஏ.சி. சரியான கூலிங். இரண்டு மணி நேரம் அந்தக் குளிரில் இருந்ததால், "பாத்ரூம் எங்கே இருக்கு' என சைகையால் ரஜினியிடம் கேட்டேன். "பாத்ரூம் எல்லிதே' என்று ரஜினி கேட்க... கொஞ்சமும் தயங்காமல் முதல்வர் கிருஷ்ணாவே என்னை அழைத்துக் கொண்டு போய் காட்டினார்.

மறுபடியும் ரஜினி என்னை, "பார்த்தியா' என்பதுபோல பார்த்தார். திரும்பி வந்ததும், ""இது உங்க வீடா?'' என கிருஷ்ணாவிடம் கேட்டேன். ""No..no...This is not my house. This is government's house. For this period, I am staying here'' என்றார் அவசரமாக.ரஜினிக்கு ஒரே சிரிப்பு. ""கோபால் இவ்வளவு தில்லு கூடாது. ஒரு சி.எம்.கிட்டயே உங்க வீடான்னு கேட்கறீங்க''ன்னு இரவு வீடு போகும் வரை சொல்லிக் கொண்டே வந்தார்.

டிபன் பரிமாறப்பட்டது. சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஏ.டி.ஜி.பி. ஜெயப் பிரகாஷ் முதல்வரிடம் சென்று ஏதோ சொன்னார். கிருஷ்ணாவின் முகத்தில் ஆச்சரியம் பரவியது. "wow.. 200 Press peoples. How can he manage them?'' என்று யோசித்தார். விஷயம் இதுதான். வெளியே 200 பத்திரிகையாளர்கள் ரொம்ப நேரமாகக் காத்திருக்கிறார்கள். நான் வெளியே வந்து பேசாமல் அவர்கள் புறப்பட மாட்டார்கள். இதைத்தான் முதல்வரிடம் ஏ.டி.ஜி.பி சொன்னார். நான் பத்திரிகையாளர்களை சந்திக்கத் தயாரானேன். கிருஷ்ணா ஆச்சரி யத்துடன் ரஜினியைப் பார்த்து "ஹேகே சமாளிஸ்தாரே' (இவரு சமாளிச்சுருவாரா?) என்றார். அதற்கு ""காது நோடி'' (பொறுத்துப் பாருங்க) என ரஜினி சொன்னார். நான் முதல்வருக்கு நன்றி தெரிவித்து, அடுத்த முறை ராஜ்குமாரோடு பார்ப்போம் என்று சொல்லிவிட்டு பத்திரிகையாளர்களை சந்திக்க கிளம்பினேன். ரஜினியிடம் கிருஷ்ணா ஏதோ சொன்னார். பிறகு ரஜினி என்னிடம், ""நைட் சொல்றேன் கோபால்'' என்றார்.மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஐ.ஜி. சீனிவாசன் என்னை பத்திரிகை யாளர்கள் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றபோது, ""ஏன் சார் இவ்வளவு ஃபோர்ஸ்?'' என்று கேட்டேன். ""உங்க மேலே ஒரு துரும்புகூட படக்கூடாதுங்கிறது எங்க சி.எம். உத்தரவு சார்'' என்றார் அவர். என்னைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த பத்திரிகையாளர்கள், இத்தனை போலீஸ் பாதுகாப்புடன் வருவதைப் பார்த்ததும் சீற ஆரம்பித்துவிட்டார்கள்.""எங்களை சந்திக்க வருவதற்கு இத்தனை போலீஸ் பாதுகாப்பு எதற்கு?''""நல்ல கேள்வி கேட்டீங்க. இதைத்தான் நானும் உங்க ஐ.ஜி.கிட்டே கேட்டேன். நான் சொன்னதை சொல்லுங்க சார்'' என சீனி வாசனைப் பார்த்து சொன்னேன். அவர் விளக்கி முடித்ததும், நான் பத்திரிகையாளர்களுடன் பேச ஆரம்பித்தேன். உதயா டி.வி.யில் லைவ்வாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது இந்த சந்திப்பு. எடுத்த எடுப்பிலேயே, ""நம்ம ராஜ்குமாரை உங்க சார்பா இன்று காலையில்தான் பார்த்துவிட்டு வந்தேன்'' என்றேன். அதுவரை இருந்துவந்த பதற்றம் அப்படியே தணிந்தது. அதன்பின் 2 மணி நேரம், நீடித்த சந்திப்பை முதல்வர் கிருஷ்ணாவும் டி.வி.யில் பார்த்திருக்கிறார். பேட்டி முடிந்ததும் பெங்களூரு பத்திரிகை யாளர்கள் பலர் என்னுடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டதையும் கிருஷ்ணா பார்த் திருக்கிறார். "200 பத்திரிகையாளர்களை ஒருசேர சமாளித்த இவர், வீரப்பனையும் மசிய வைப்பார்' என்ற நம்பிக்கை அவருக்குள் அழுத்தமாக பதிந்திருப்பதாக கிருஷ்ணாவின் பி.ஏ. சாஸ்திரி என்னிடம் கூறினார்.பிரஸ் மீட் முடிந்ததும் ""ராஜ்குமார் சார் வீட்டுக்குப் போயிட்டு இன்னைக்கு நைட் என் வீட்டில்தான் தங்குறோம்'' என்று ரஜினி சொல்லியிருந்தார். பிரஸ் மீட்டுக்குப் பிறகு ரஜினி வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார் அவருடைய உதவி யாளர். ரஜினி என்னிடம், ""இவ்வ ளவு சீரியஸான செக்யூரிட்டி இருக்கும்னு நினைக்கலை கோபால். இங்கே நீங்க தங்குறது பாதுகாப்பில்லையாம். உங்களுக்காக மூணு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் புக் பண்ணி, மூணு ஹோட்டல்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போட்டிருக்காங்க. அதனால நாம ராஜ்குமார் சார் வீட்டுக்குப் போயிட்டு வந்ததும் உங்களை ஹோட்டலில் விட்டுடுறேன். காலையில் பார்க்கலாம்'' என்றார்.ராஜ்குமார் வீட்டில் இருந்தோம். சி.எம். வீட்டில் எம்.எல்.ஏ.க்கள் என்ன மரியாதை தந்தார்களோ அதே மரி யாதையை ராஜ்குமார் குடும் பத்தினர் எனக்குத் தந்தார்கள். ராஜ்குமாரின் மனைவி பர் வதம்மாள், வீட்டை சுற்றிக் காட்டச் சொன்னார். நல்ல வீடுதான். ஆனால், ரசித்துப் பார்க்கும் மனநிலையில் நான் இல்லை. கடத்தப்பட்ட ஆரம்ப நாட்களில் ராஜ்குமார் அந்தக் காட்டில் எப்படி இருந்தார். இப்போது எப்படி இருக்கிறார் என்பதை விளக்கமாகச் சொன் னேன். அவரது குடும்பத்தினர் மனநிலையும் சகஜ நிலைமைக்கு வந்தது. என்னிடம் ராஜ்குமார் பேசிய விஷயங்களை சொன்னபோது, அவர்களுக்கு சந்தோஷம். ராஜ்குமாரும் அவரது குடும்பத்தினரும் மட்டுமே அறிந்திருந்த பல தகவல்களை நான் சொல்லிக்கொண்டிருந்ததுதான் அந்த சந்தோஷத்துக்குக் காரணம். தன்னுடைய அம்மா- அப்பா படத்தை ராஜ்குமார் கேட்டிருந்தார். அதை அவர்களிடம் சொன்னேன். கொடுத்தார்கள். அதன்பின் நடுவில் நான் நிற்க, ஒரு பக்கம் ரஜினி, இன்னொரு பக்கம் ராஜ்குமார் மகன் நிற்க வீட்டு வாசலில் பத்திரிகை யாளர்களை சந்தித்தோம்.ஸ்டார் ஹோட்டலிலிருந்து தம்பி காமராஜுக்கு போன் செய்து விவரங்களை சொல்லி, கலைஞரிடம் தெரிவிக்கச் சொன்னேன். நானும் கலைஞரிடம், ""பேங்களூர் விஷயம் நல்லபடியா போச்சுண்ணே'' என்றேன். பாதுகாப்பு பலமாக இருந்ததால், பெங்களூருவில் இருந்த தம்பி ஜெ.பி., நக்கீரன் ஏஜென்ட் உள்பட யாரையும் சந்திக்க முடியவில்லை. ஹோட்டலில் இருந்த நேரத்தில் ரஜினியிடமிருந்து போன். ""கோபால்.. சி.எம். கிருஷ்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கிறார். உங்க மேலே அவருக்கு முழு நம்பிக்கை. அதைத் தான் என்கிட்டே அப்ப சொன்னார். நீங்க பிரஸ் மீட் செஞ்ச விதத்தை பார்த்துட்டு ரொம்ப அசந்து போயிருக் கிறார். 'We are selected a right person to rescue Rajkumar' னு சொல்லியிருக்கிறார் கோபால்'' என்றார். ராஜ்குமார் மீட்பு நடவடிக்கை நல்லபடியாக முடியவேண்டும் என்று அதிக அக்கறை எடுத்துக்கொண்டவர் ரஜினி. அதனால், கர்நாடக முதல்வரின் நம்பிக்கை அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. காலையில் பெங்களூரு ஏர்போர்ட்டில் என்னை வழியனுப்பி வைக்க வந்தார்.""கோபால் என்கிட்டே என்ன சொன்னீங்க.. சதாப்தி ரயிலா.. ம்... ஹா...ஹா.. ஹா... இங்கே உங்க பவர் என்னன்னு இப்ப பார்த்தீங்களா?'' என்றார் பெருமை பொங்க. எனக்கும் அவரை நினைத்து பெருமையாக இருந்துச்சு.2000-ம் ஆண்டு பெங்களூரு பயணத்துக்கும், 2001-ம் ஆண்டு பெங்களூரு பயணத்துக்குமிடையில் ஒரு வருடம் தான். ஆனால், எத்தனை மாற்றங்கள்! நான் போன் செய்ததும், என்னாச்சு கோபால் என்று ரஜினி பதறியதற்கு அதுதான் காரணம். ஏனென்றால், ஜெயலலிதா ஆட்சியால் குறி வைக்கப்பட்டது, நக்கீரன் மட்டுமா? ரஜினியும்தானே.....!

No comments:

Post a Comment