மாவீரர்களை நினைவு கொள்வதற்கான உரிமையை மீட்க முனைவோமா?
தமிழீழ தேசத்து மக்களைப் பொறுத்தவரை மாவீரர் நாள் என்பது புனிதர்களைப் பூசிக்கின்ற திருநாள்.
நவம்பர் 27 என்றவுடன் உலகெங்கும் வாழும் தமிழீழ தேசத்தவர்களுக்கு மாவீரர் நாள் தான் நினைவுக்கு வரும்.
ஆனால், இந்த நாளை தாயகத்தில் வெளிப்படையாக அனுஷ்டிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.
* சுற்றிலும் இராணுவக் கெடுபிடிகள் நிறைந்துள்ள தமிழர் தாயகத்தில் மாவீரர்களின் நினைவைப் போற்றும் நிகழ்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது. தமிழீழ விடுதலைப் போராட்டம் கூர்மை பெற்று மாவீரர் நாளை அனுஷ்டிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை இப்படியொரு இக்கட்டான நிலை தமிழ் மக்களுக்கு வந்ததில்லை. காலத்துக்குக் காலம் புலிகளின் தளப் பிரதேசங்கள் மாறிய போதும் புலிகளின் கட்டுப்பாட்டில் ஏதாவதொரு பிரதேசம் இருந்து கொண்டேயிருந்தது. அங்கெல்லாம் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடந்தேறி வந்தன. ஆனால், இன்றைய நிலையில் தாயகத்தில் ஒரு துண்டு நிலத்தில் கூட மாவீரர் நாளை சுதந்திரமான முறையில் அனுஷ்;டிக்க முடியாதளவுக்கு சிங்களத்தின் இரும்புக் கரங்கள் அழுத்திப் பிடித்துள்ளன.
மாவீரர் நாள் பற்றிய சிந்தனைகளே தமிழர்களுக்கு வரக் கூடாது என்பதற்காக பல்வேறு வாசல்களையும் திறந்து விடப் படைத்தரப்பும் அரசாங்கமும் தயாராக இருக்கின்றன. ஆனாலும் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து மாவீரர் நாளை அழித்து விட முடியாது.
அவர்களின் மனங்களில் இருந்து மாவீரர்களின் நினைவுகளை துடைத்து விட முடியாது.
தாயகத்தில் வாழுகின்ற மக்கள் ஒவ்வொருவரும் மாவீரர் நாளை உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்காகக் காத்திருக்கின்றனர்.
அவரவர் மனங்களில் தீபம் ஏற்றி மாவீரர்களை நினைவு கொள்வதற்காகக் காத்திருக்கின்றனர்.
ஏனெனில், மாவீரர் ஒவ்வொருவரினதும் மரணங்கள் சாதாரணமானவை அல்ல. அவர்கள் யாரும் தமக்காக மடிந்தவர்கள் அல்ல.
மரணம் நிகழப் போவதை அறிந்து கொண்டே போர்க்களம் போனவர்கள்.
* சாவைச் தெரிந்து கொண்டே சரித்திரமானவர்கள். தமக்காகவே மாவீரர்கள் மரணத்தைத் தழுவினார்கள் என்ற உணர்வு ஒவ்வொரு தமிழனின் மனதிலும் படிந்து போயிருக்கிறது. சிலர் இதை வெளிப்படையாக காண்பிக்கின்றனர். பலர் அதை உள்ளுக்குள் போட்டுப் புதைத்து வைத்து மௌனமாக அழுகின்றனர். இதனால் தான் சிங்கள தேசத்தினால் மாவீரர்களின் நினைவுகளை தமிழ் மக்களிடமிருந்து பிரிக்க முடியாதிருக்கிறது.
மாவீரர்கள் பிற நாட்டில் இருந்தோ – வேற்றுலகில் இருந்தோ வந்து எமக்காகச் சண்டையிட்டவர்கள் அல்ல.
எம்முடனேயே பிறந்து – எம்முடனேயே வாழ்ந்து – எமக்காவே உயிர் கொடுத்தவர்கள் அவர்கள். அப்படிப் பட்டவர்களை தமிழ் மக்கள் ஒருபோதும் தமது இதயத்தில் இருந்து அகற்றி வி;ட முடியாது.
அதைச் செய்ய நினைப்பது சிங்கள தேசத்தால் இயலாத காரியம்.
* மாவீரர்களை தமிழ் மக்களின் மனங்களில் இருந்து மறைத்து விட சிங்கள தேசம் முயற்சிக்குமேயானால் அதைப் போன்ற தவறு வேறேதும் இருக்க முடியாது. தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களைச் சிதைத்து – மாவீர்களின் தியாக வரலாற்றை மறைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. ஆனால், இந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறப் போவதில்லை. அதேவேளை, தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள், நினைவாலயங்களை அழித்து எமது வரலாற்றைப் புதைத்து விட எண்ணும் சிங்கள தேசத்தின் செயலுக்கு நாம் அடிபணிந்து நிற்கப் போகிறோமா என்ற கேள்வி இந்தத் தருணத்தில் எழுகிறது.
அப்படி அடிபணிவோமேயானால் அது மாவீரர்களை மறந்து போகச் செய்ய முனையும் சக்திகளுக்குத் துணை போனதாகி விடும்.
எமக்காக உயிர் கொடுத்த உத்தமர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்துவதாக அமைந்து விடும்.
மாவீரர்களைப் போற்றும் நிகழ்வுகளை தாயகத்திலும் நடத்துகின்ற சூழலை உருவாக்கும் பொறுப்பும் எம்முடையதே. இது இலகுவில் சாத்தியமான தொன்றல்ல என்பது தெரிந்ததே.
இராணுவக் கெடுபிடிக்குள் இருந்து கொண்டு அதைச் செய்ய முடியாது தான். ஆனால், சட்டரீதியாக இதற்கு வாய்ப்;புகள் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.
* 1971 இலும், 1989 இலும் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி நடத்திய ஜேவிபி, இதன்போது மாண்டு போன தமது உறுப்பினர்களின் நினைவாக வீரர்கள் தினத்தை கொண்டாடுகிறது. அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கும் போது தமிழ் மக்கள் மாவீரர் நாளை பகிரங்கமாக நடந்த முடியாதா? ஜே.வி.பி.க்கு ஒரு நீதி எமக்கு ஒரு நீதியா? என்ற கேள்வியை தமிழ் மக்கள் எழுப்ப வேண்டிய தருணம் இது.
மாவீரர்கள் எமது பிள்ளைகள், சகோரர்கள், குடும்ப அங்கத்தினர்கள். அவர்களின் நினைவில் சுதந்திரமாக நனைவதற்குக் கூட, தமிழருக்கு உரிமை இல்லையா?
* இறந்து போன உறவுகளுக்காக அழுவதற்குக் கூட உரிமை இல்லை என்றால் – அப்படிப்பட்ட சிங்கள தேசத்தில் தமிழ் மக்ளுக்கு எப்படி நிம்மதியான வாழ்வு கிடைக்கும். இந்த உண்மையை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்வதற்கும் இதையொரு வாய்ப்பாகப் பயன்படுத்தலாம். மாவீரர்களை நினைவு கொள்வதற்கு சட்டரீதியான ஒரு அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சட்டவல்லுனர்கள் தயாராக வேண்டும். மாவீரர் துயிலுமில்லங்களிலும், நினைவாலயங்களிலும் கூடி – அவர்களுக்காக அழுவதற்கான, அவர்களின் நினைவை சுமப்பதற்கான உரிமைகளைத் தட்டிக் கேட்க வேண்டும்.
தட்டினால் தான் திறக்கும் – இது எமது விடுதலைப் போராட்டம் தந்த பாடம்.
அரசுக்கு எதிராகப் போராடி மடிந்த சிங்களவர்களை நினைவு கொள்ள முடியும் என்றால்- அதில் தமிழருக்கு எப்படி விதிவிலக்கு இருக்க முடியும்?
மண்ணுக்காக மரணித்தவர்களின் நினைவாலயங்களை அழிக்காமல் பாதுகாப்பதற்கும் சட்டரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்வதற்கு முயற்சிக்கலாம். போரில் இறந்த எதிரியின் நினைவாலயங்களைக் கூட மதிப்பது தான் உண்மையான போர் வீரர்களின் மரபு. ஆனால் அது சிங்கள தேசத்துக்குப் பொருத்தமானதொன்றல்ல.அப்படிப்பட்ட சிங்கள தேசத்துக்கு பாடத்தைக் கற்பிக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் ஊடாகவோ அல்லது சர்வதேச செல்வாக்குகளைப் பயன்படுத்தியோ தாயகத்தில் மாவீரர்களை நினைவில் நிறுத்துவதற்கான உரிமைகளைத் தட்டிக் கேட்க வேண்டும்.
மாவீரர்களை நினைவு கூர்வதற்கான உரிமைகளைக் கூடத் தர மறுக்கும் சிங்களதேசம் தமிழருக்கு வேறு எந்த உரிமைகளையும் கொடுத்து விடாது. இந்த உண்மையை சர்வதேசத்துக்கு உணர்த்துவதற்கு இப்படியானதொரு முயற்சி அவசியம். சிங்கள தேசத்தின் கதவுகளைத் தட்டி தட்டி எமக்கான உரிமைகளைக் கேட்பதற்கு தயாராவார்களா தமிழ் சட்டவல்லுனர்கள்?
கிருஸ்ணா அம்பலவாணர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment