சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். அவருடன் பொட்டு அம்மான், அகிலா, நளினி, முருகன் உட்பட பலர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டனர்.
சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்த வழக்கு, சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தனியாக அமைக்கப்பட்ட தடா கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகியோர் சி.பி.ஐ.யிடம் சிக்கவில்லை. எனவே வழக்கு பிரிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நளினி, முருகன் உட்பட சிலர் மீதான வழக்கு மட்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கடைசிவரை பிடிபடாத பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் மீதான வழக்கு 1992-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தனியாக பிரிக்கப்பட்டது. இந்த வழக்கு, சென்னை முதலாம் கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 17 ஆண்டுகளாக பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. வழக்கின் முக்கியத்துவம் கருதி நீதிபதியின் அறையில் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. முதலாம் தடா கோர்ட்டு நீதிபதி பி.ராமலிங்கம் விடுமுறையில் சென்றிருப்பதால், 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி எம்.ஏ.ஆனந்தகுமார் அறையில் நேற்று காலையில் விசாரணை நடந்தது.
சி.பி.ஐ. அதிகாரி மற்றும் வக்கீல் ஆஜராகி 4 மூலைகளிலும் சீலிட்ட கவர் ஒன்றை தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ம் வாரத்துக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இலங்கையில் நடந்த போரில் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகின. அவர்கள் இறப்பு சான்றிதழை சி.பி.ஐ. தாக்கல் செய்தால்தான் வழக்கு முடிவுக்கு வரும்.
நேற்றைய விசாரணையில் அவர்களின் இறப்பு சான்றிதழ் தாக்கல் செய்யப்படவில்லை என்று கோர்ட்டு வட்டாரம் தெரிவித்தது. பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை அரசு கொடுக்க வேண்டும். எனவே இவர்களின் இறப்பு சான்றிதழைக் கேட்டு இலங்கை அரசிடம் சி.பி.ஐ. தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment