Tuesday, April 6, 2010

வைரமுத்துவால் சலசலப்பு


எதிர்மறை ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, இனி இசை வெளியீட்டு விழா என்று அழைக்க்க் கூடாது, பாடல் வெளியீட்டு விழா என்றுதான் அழைக்க வேண்டும் என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை, இனி பாடல் வெளியீட்டு விழா என்றுதான் அழைக்க வேண்டும்... அது என்ன இசைக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம்? என்று கேட்டுள்ளார்.

இது நடந்தது எதிர்மறை என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில்.

வழக்கமாக ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு திரையுலக விஐபிக்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பார்கள். இசைத் தட்டுக்களை வெளியிடுவதும் பெறுவதும் அவர்களாகவே இருப்பார்கள்.

ஆனால் 'எதிர்மறை' பட இயக்குநர் ஜி அருண் வித்தியாசமாக, ரசிகர்களை மேடையேற்றி இசைத் தட்டை பெற்றுக் கொள்ள வைத்தார்.

இந்த விழாவில் ரசிகர்களை மேடையேற்றுவதற்கு ஒரு தனி ஏற்பாட்டைச் செய்திருந்தார் அருண். அதன்படி, முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட பஸ் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் எதிர்மறை படத்தின் போஸ்டர்கள், ஸ்டில்கள் ஒட்டப்பட்டு தமிழகம் முழுக்க உலா வரவைக்கப்பட்டது.

இந்த பஸ்ஸில் விஜயசாரதி, லட்சுமி, அம்மு உள்ளிட்ட நட்சத்திரங்களும் பயணித்தார்கள். இவர்கள் தமிழகம் முழுக்க ரசிகர்களைச் சந்தித்து எதிர்மறை படம் குறித்த சில போட்டிகளை நடத்தினர். அதில் வெற்றி பெற்றவர்களை ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் ஏற்றி அறிமுகம் செய்து வைத்தார் அருண்.

இசை குறுந்தகட்டினை இயக்குநர்கள் பாலுமகேந்திரா, வஸந்த், அபிராமி ராமநாதன் வெளிட்ட, அவற்றை ரசிகர்கள் பெற்றுக் கொண்டனர். இதுவரை திரையுலகில் இந்த அளவு ரசிகர்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஒரு இசை வெளியீட்டு விழா நடந்ததில்லை என பாலுமகேந்திரா தெரிவித்தார்.

விழாவில் பேசிய வைரமுத்து, இதுபோன்ற விழாக்களை இசை வெளியீட்டு விழா என்று சொல்லக் கூடாது, பாடல் வெளியீட்டு விழா என்பதே சரியானது.. இங்கே என்ன படத்தின் இசையா வெளியாகிறது? என்றார்.

'இசையமைப்பாளரின் மெட்டுக்கு வைரமுத்து எழுதிய பாடல்தானே இங்கே வெளியாகிறது... தனியாக கவிதை வரிகளை மட்டுமா வெளியிடுகிறார்கள்? அப்புறமெப்படி பாடல் வெளியீடு எனச் சொல்ல முடியும்... பாடலும் இன்னொரு இசையின் வடிவம்தான் என்பதை அவ்வப்போது மறந்துவிடுகிறாரா வைரமுத்து?' என்றார் விழாவுக்கு வந்திருந்த இன்னொரு கவிஞர்.

No comments:

Post a Comment