Tuesday, April 6, 2010

ஓட்டுக்கு தங்கக்காசு! இளைஞர் காங்கிரஸ் தேர்தல்...


மிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக காங்கிரஸை ஆட்சியில் அமர்த்த வேண்டுமென்பது ராகுல்காந்தியின் கனவு. இதற்கு தமிழகத்தில் பலகீனமாக இருக்கும் காங்கிரஸை வலிமையாக்க வேண்டுமானால் இளைஞர் காங்கிரஸை வலிமையுள்ளதாக மாற்ற வேண்டுமென்பது அவரது திட்டம். இதற்காக இளைஞர் காங்கிரஸில் உள்கட்சித் தேர்தலை வெளிமாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் காரர்களை வைத்து நடத்துகிறார். உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் இந்த இறுதிக்கட்ட தேர்தலில் வெற்றி பெற பேரங்கள், உல்லாச உற்சவங்கள், இழுப்பு வேலைகள் என ஒரு பொதுத் தேர்தலுக்கான அத்தனை ‘ அம்சங்களும்' அரங்கேறிக்கொண்டி ருக்கிறது.

பஞ்சாயத்து வார்டு, பேரூராட்சி, நகராட்சி ஆகியவற்றிற்காக நடத்தப்பட்ட முதல்கட்டத் தேர்தலில் சுமார் 1 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இவர்கள் மூலம் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் இரண்டாம் கட்டத்தேர்தல் சமீபத்தில் தமிழகம் முழுவதும் நடந்தது. இதில் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு தலைவர், துணைத் தலைவர் உள்பட 20 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் 4680 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், சில தொகுதிகளில் 20 நிர்வாகிகளுக்கு பதிலாக 16, 18, 19 என தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் 4300 பேர் மட்டுமே தேர்வாகியிருக்கிறார்கள்.

இந்த 4300 பேர் ஓட்டு போட்டு மாநில நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் இறுதிக் கட்ட தேர்தல் 11-ந் தேதி திருச்சியில் நடக்கிறது.

ஆந்திராவை சேர்ந்த தேர்தல் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ""இளைஞர் காங்கிரசில் 14 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இதில் சுமார் 2 லட்சம் போலி உறுப்பினர்கள் களையப் பட்டு கடைசியில் 12 லட்சம் பேர் உறுப்பினர்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் 12 லட்சம் பேரும் ஓட்டுப்போட வரவில்லை. 40 சதவீதம் தான் ஓட்டுக்கள் பதிவானது.அதாவது 12 லட்சத்தில் 5 லட்சம் பேர்தான் ஓட்டுப்போட வந்தனர். அதனால் ராகுல்காந்திக்கு இந்த தேர்தல் முழு வெற்றியைக் கொடுத்திருப்பதாக சொல்லமுடியாது '' என்கிறார் அதிரடியாக.

தேர்தல் அதிகாரியின் அதிர்ச்சியளிக்கும் இந்த கூற்று பற்றி காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ""காங்கிரஸில் கோஷ்டிகளை ஒழித்து புதிய சக்தியை உருவாக்குவேன். அதனை இளைஞர் காங்கிரஸிலிருந்து துவக்குகிறேன் என்று சொல்லி தேர்தலைக்கொண்டு வந்தார் ராகுல். ஆனால் கோஷ்டிகள் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க களத்தில் இறங்கியதால்தான் 12 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க முடிந்தது. கோஷ்டித் தலைவர்கள் ஒதுங்கிக்கொண்டிருந்தால் ஆயிரக்கணக்கில்தான் உறுப்பினர் களைச் சேர்த்திருக்க முடியும். அந்த நிலையில் தேர்தலே நடந்திருக்காது.

12 லட்சம் உறுப்பினர்களையும் தேர்தலில் ஓட்டளிக்க வைத்திருந்தால் ராகுல்காந்தி மீது தமிழக இளைஞர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால் 5 லட்சம் பேர் மட்டும்தான் ஓட்டுப்போட்டுள் ளனர். இதிலும் 2 லட்சம் ஓட்டுக்கள் கள்ள ஓட்டுக்கள். தி.மு.க., அதி.மு.க.வினரைக் கொண்டு வந்துகூட ஓட்டுப்போட வைத்தனர். 40 வயசு, 50 வயசு முதியவர்கள் எல்லாம் இளைஞர் தேர்தலில் ஓட்டுப் போட்டனர். அதனால் பதிவானது 3 லட்சம் ஓட்டுகள் என்று சொல்வதுதான் சரி. இதிலும் ஒரு 50 ஆயிரம் இளைஞர்கள் வேண்டுமானால் தானாக பூத்துக்கு வந்திருப்பார்கள். மற்றபடி ஒவ்வொரு கோஷ்டியும் பணத்தை தண்ணீராக இறைத்து இரண்டரை லட்சம் பேரையும் கூட்டிக்கொண்டு வந்துதான் ஓட்டளிக்க வைத்தனர். அதனால்தான் தேர்தல் அதிகாரி அப்படி சொல்லியிருக்கிறார். எல்லா குரூப்பையும் ஒழிப்பேன் என்கிறார் ராகுல். அந்த குரூப் இல்லைன்னா தேர்தலே நடந்திருக்காது. ஆக இந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலால் ராகுல்காந்தி போடுகிற திட்டம் பலிக்காது என்பதுதான் எதார்த்தம்'' என்கிறார் சீரியஸாக.

இந்தத் தேர்தலில் வாசன், ப.சிதம்பரம், தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி, பிரபு, ஜெயந்தி நடராஜன், மணிசங்கர்அய்யர், செல்லக்குமார் என அனைத்து கோஷ்டிகளும் களமிறங்கினாலும் வாசன், சிதம்பரம் தரப்பை தவிர மற்றவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பொதுவாக தனக்கென்று ஒரு கோஷ்டியை உருவாக்க நினைக்காத சிதம்பரம், இளைஞர் காங்கிரஸில் வலிமையைக்காட்ட நினைத் தார். சிதம்பரத்தை விட இதில் அதிதீவிரம் காட்டியவர் அவரது மகன் கார்த்திசிதம்பரம்தான்.

தேர்தலில் பெரும் பான்மையை பிடிக்க, கராத்தே தியாகராஜன், சிரஞ்சீவி, ஒய்.வீ.ஆர், ராஜூ உள்பட 120-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர் களை நியமித்து களத்தில் இறக்கினார். இவர்களின் திட்டத்தை அறிந்த வாசன், அதேபோல 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்ததுடன் தனது ஆதரவாளர்களான 5 எம்.பி.க்கள், 18 எம்.எல்.ஏ.க் களிடமும் பொறுப்புகளைக் கொடுத்தார். இப்படி இந்த இரண்டு கோஷ்டிகள்தான் தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தன.

தற்போது 234 சட்டப்பேரவை தொகுதிகளில் தலைவர் பொறுப்பை வாசன் தரப்பு 125 இடங்களையும் சிதம்பரம் 71 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. இளங்கோவன் 10, தங்கபாலு 9, பிரபு 8, கிருஷ்ணசாமி 5, மாணிக்தாக்கூர் 5, ஜெயந்தி 4, மணிசங்கர் அய்யர் 3 என கைப்பற்றியுள்ளனர். இவர்களைத் தவிர 10-க்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் ஜெயித்துள்ளனர். அதே போல சட்டப்பேரவை தொகுதிகள் மூலம் சுமார் 4 ஆயிரம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதில், வாசன் தரப்பு 1500, சிதம்பரம் 1200, இளங்கோவன் 400, பிரபு 300, கிருஷ்ணசாமி 200, தங்கபாலு 100 என்கிற எண்ணிகையில் வெற்றிபெற்றுள்ளனர். சுயேட்சைகளும் கணிசமான எண்ணிக்கையில் ஜெயித்திருக்கிறார்கள்.

நடந்து முடிந்துள்ள இரண்டுக்கட்ட தேர்தலிலும் வாசனுக்கு போட்டியாக சிதம்பரம் தரப்பு வந்திருப்பதால் தனது ஆதரவாளர்களிடம் ஏகத்துக்கும் கோபப்பட்டிருக்கிறார் வாசன். அதிலும் வாசனின் செல்வாக்கு உயர்ந்துள்ள தஞ்சை மண்டலத்தில் மன்னார்குடி, ஒரத்தநாடு, நாகை, திருவாரூர், வேதாரண்யம், திருவிடை மருதூர், கும்பகோணம், கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி ஆகிய தொகுதிகளை சிதம்பரம் தரப்பு கைப்பறியதுதான் வாசனின் கோபம் எக்கச்சக்கத்தில் அதிகரித்து பொறுப் பாளர்களை பொரிந்து தள்ள வைத்துள்ளது.

""மூப்பனார் கோட்டையிலேயே நாங்கள் ஜெயித்திருப்பதற்கு கார்த்திசிதம்பரத்தின் திட்டமிடல்தான் காரணம். தஞ்சை மண்டலத் தில் நமக்கு எதிராக இளைஞர்கள் போய்விடுவார் களா? மூப்பனாரின் செல்வாக்கு பலமாக இருக்கிறது என்கிற மித மிஞ்சிய நம்பிக்கையில் வாசனும் அவரது சித்தப்பா ரெங்கசாமி மூப்ப னாரும் இருந்ததாலும் வாசன் அணியில் உள்ள ஏகப்பட்ட கோஷ்டிகளாலும் நாங்கள் ஜெயித் தோம்'' என்கிறார்கள் சிதம்பரம் ஆதரவாளர்கள்.

11-ந் தேதி திருச்சியில் நடைபெறப்போகும் தேர்தலில் அந்த இடங்களை கைப்பற்ற வாசன் தரப்பும் சிதம்பரம் தரப்பும் மட்டுமே முடியும் என்பதால் இரண்டு தரப்பும் கச்சை கட்டுகின்றன. இரண்டு தரப்பும் 400, 300, 200 ஓட்டுகளை வைத்திருக்கும் மற்ற கோஷ்டி தலைவர்களிடமும் அவர்களது ஆதரவாளர்களிடமும் பேரங்களை துவக்கியிருக்கிறது. ஒரு ஓட்டுக்கு குறைந்த பட்சம் 1 லட்ச ரூபாய் தரவும் ரெடியாக இருக்கிறது ரெண்டு தரப்புமே. இது தவிர வெற்றி பெற்ற தங்களது ஆட்கள் எதிர்தரப்பிடம் விலை போய் விடக்கூடது என்பதற்காக தங்களின் நேரடி கஸ்டடியில் வைத்து பாதுகாக்கிறது அனைத்து கோஷ்டிகளும். மேலும் வெற்றி பெற்ற நிர்வாகி களை ஊட்டி, கொடைக்கானலுக்கு அனுப்பி "உல்லாச உற்சவத்தை' அனுபவிக்கவும் ஏற்பாடு செய்தனர். இதனால் கோடை வாசஸ்தலங்களில் எங்கு பார்த்தாலும் காங்கிரஸ்காரர்கள் 20 பேர் 30 பேர் கூட்டம் கூட்டமாக சுற்றுவதைப் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் மாநில தலைவருக்கு யாரை நிறுத்துவதென்கிற குழப்பம் வாசன் மற்றும் சிதம்பரம் அணியில் மனுதாக்கலுக்கான நாள் வரை இழுத்துக்கொண்டேயிருந்தது. மனு தாக்க லுக்கு 7-ந் தேதி கடைசி நாள் என்பதால் 5-ந் தேதி இரவு, வரதராஜன் என்கிற இன்ஜினியரிங் இளைஞரை தேர்வு செய்தது ப.சி. தரப்பு.

""மாநிலத் தலைவருக்கு போட்டியிட நல்ல இளைஞர்கள் யாரும் சிக்காததால்தான் கடைசிநாள் வரை இரண்டு கோஷ்டிகளும் தடுமாறியது'' என்கிற இளங்கோவன் ஆதரவா ளர்கள், ""பொதுத்தேர்தலில் நடக்கும் அத்தனை அடாவடி களும் முறைகேடுகளும் இந்தத் தேர்தலிலும் நடந்தது. ஓட்டுக்கு 2000 பணம், தங்கக்காசு, தேர்தல் அதிகாரிகளுக்கு சொகு சான வசதிகள், பிரியாணி விருந்து, கள்ள ஓட்டுகள் என தூள் பறந்தது. இந்தத் தேர்தலில் எல்லா கோஷ்டிகளும் செல விட்ட தொகையை கணக்கிட்டால் 15 கோடியைத் தாண்டும். மேலும் கட்டப்பஞ்சாயத்து, ரௌடியிஸம் செய்துகொண்டிருந்த பல இளைஞர் கள் நிர்வாகிகளாக வந்திருப்பதுதான் துரதிர்ஷ்டம். இளைஞர் காங்கிரஸில், எந்த கோஷ்டியையும் சேராத ஒரு புதிய மாஃபியா கும்பல் இப்போது நுழைந்திருப்பது கவலை தருகிறது'' என்கின்றனர்.

இளைஞர் காங்கிரஸில் இதுவரை எந்த ஒரு வலிமையும் இல்லாத ப.சி.தரப்பு, தற்போதைய தேர்தலில் வாசன் அணிக்கு போட்டியாக உருவெடுத்திருப்பது பற்றி வாசன் தரப்பில் கேட்டபோது... ""சிதம்பரம் தரப்பினரின் கள்ள ஓட்டுகளும் தேர்தல் அதிகாரிகள் மிரட்டப்பட்டதும் தான் காரணம். பல இடங்களில் தேர்தல் முடிந்ததும் ரிசல்ட்டை அறிவிக்க விடாமல் அதிகாரிகள் மிரட் டப்பட்டு, பிறகு பதிவான வாக்குகளை சரிபார்த்து அதில் தங்கள் தரப்பில் ஓட்டுகளை அதிகப்படுத்தி பதிவு செய்தனர் சிதம்பரம் ஆட்கள். இதுதான் உண்மை. இறுதிகட்ட தேர்தலில் சிதம்பரம் ஆட் களை மண்ணைக் கவ்வ வைக்கிறோம் பாருங்கள்'' என்கின்றனர்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க... தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும்? என்று அனைத்துத் தரப்பி னரிடமும் விசாரித்தபோது, ""தலைவர் பதவிகளில் வாசன் அணி அதிகமாக கைப்பற்றியுள்ள இடங் களில் நிர்வாகிகளை அதிகம் பிடித்துள்ளது ப.சி. தரப்பும் மற்ற அணியினரும். அதேபோல, தலைவர் பதவிகளில் சிதம்பரம் அணி ஓங்கியுள்ள இடங்களில் வாசன் தரப்போ நிர்வாகிகளில் மெஜாரிட்டியாக இருக்கிறது. இதனால் இளைஞர் காங்கிரஸின் எந்தக் கூட்டமும் ஒழுங்காக நடக்காது. எந்தத் தீர்மானமும் நிறைவேற்ற முடியாது. எல்லா கூட்டங்களிலும் அடி-தடி, மோதல்கள்தான் வெடிக்கும். ராகுல்காந்தி திட்டமிட்டு நடத்திய இந்தத் தேர்தலின் பலன் இதுவாகத்தான் இருக்குமே தவிர, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கிற கனவெல்லாம் நனவாகாது'' என்கிறார்கள் கோஷ்டி வித்தியாசமில்லாமல் ஒரே குரலில்.

No comments:

Post a Comment