Tuesday, April 6, 2010

அரசின் அடுக்கு மாடி அபாயம்!


கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்து 12 பேர் பலியான சம்பவத்தையே இன்னும் கோவை மக்கள் மனதிலிருந்து புரட்டிப் போட முடியவில்லை.

அதற்குள் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் கோவை அம்மன்குளத்தில் ஏழை மக்களுக்காக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் 18 அடுக்கு மாடி குடியிருப்பு களில் இரண்டு கட்டிடங்கள் ஒன்றரை அடி புதையுண்டு போனதையடுத்து, இதில் குடியேறினால் உக்கடத்தில் வசித்த மக்களுக்கு ஏற்பட்ட நிலைதான் நமக்கும் நேருமோ என்ற அச்சம் அடிசனலாய் மனதில் குடி கொண்டு விட்டது அம்மன் குளத்து வாழ் ஏழை மக்களுக்கு.

இதைத் தொடர்ந்து அமைச்சர் பொங்கலூர் பழனிச் சாமி, கலெக்டர் உமாநாத், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து புதை யுண்டு போன கட்டிடத்தை பார்வையிட பரபரப்பில் நிரம்பி யிருக்கிறது அம்மன்குளம்.

ஓட்டமும் நடையுமாய் தாங்கள் குடியேற இருந்த அக்கட்டிடங்கள் புதையுண்டு போயிருப்பதை ஏக்கமும், கோபமுமாய் வந்து வந்து பார்த்துவிட்டுப் போகும் அம்மன் குளப்பகுதி மக்களுக்கிடையே நம்மிடம் பேசிய ருக்குமணி... ""இந்த அம்மன் குளத்துல 40 வருஷத்துக்கு மேலா நாங்க குடியிருக்கறோம்ங்க. எப்ப மழை பெஞ்சாலும் தண்ணி தேங்கி நிக்குற இந்த குளத்துல கொசுக்களோட கொசுக்களா நாங்க வசிச்சிட்டிருந்தபோது எங்கள மாதிரி ஏழை பாழை களுக்கு கவுருமெண்டு வீடு கட்டித் தர்றாங்கன்னு சொன்னதும் நாங்க ரொம்ப சந்தோஷப்பட்டோம்.

முதல்ல தனித்தனி வீடா (தொகுப்பு) கட்டி தருவாங்கன்னுதான் நெனச்சோம். ஆனா தண்ணி நின்னுட்டிருக்கற இந்த குளத்து மண்ணுல இம்மாம் பெரிய நாலு மாடி கட்டிடத்தை கட்டுனா தாங்குங்களா? சும்மா பேருக்கு மணலைப் போட்டு நிரப்பி அஸ்திவாரம் போட ஆரம்பிச்ச போதே, இதுல தப்பு நடக்கும்னு தெரிஞ்சுதான் நாங்க அப்பவே எதிர்ப்பு தெரிவிச்சோம். ஆனா ஏழைங்க சொல் அம்பலத்துல ஏறாதுங்கறது போலதான் யாரும் எங்க குரலை கேட்கவேயில்லை. இப்ப பாருங்க நாங்க நினைச்சதுதான் நடந்திருக்கு. இதுல நல்ல விஷயம் என்னன்னா யாரும் குடி போகாத போதே இப்படி நடந்ததுதான். ஒருவேளை குடிபோய் ஏதாவது ஆயிருந்துச்சுன்னா?'' என்கிறார் பயம் நிரம்பிய கண்களோடு.

""மொத்தம் இங்க 936 வீடுகளும், உக்கடத்துல 2094 வீடுகளும் கட்டிட்டு இருக்கறாங்க. இதுக்காக 118 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கறாங்க. கட்றதுக்கு முன்னாலேயே மண் பரிசோதனையை சரியான முறையில செஞ்சுருந்தா இப்ப பிரச்சினையிருந்துருக்காது'' என்கிறார் அம்மன் குளப்பகுதியை சேர்ந்த குடியிருப்போர் நலச் சங்கத் தலைவரான செல்வராஜ்.

ஆனால் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாகப் பொறியாளரான கோபியோ...

""சென்னையில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தில்தான் இவ்விடத்திலிருந்து எடுக்கப்பட்ட மண் பரிசோதனை செய்யப்பட்டது. மண் பரிசோதனையில் கட்டிடம் கட்ட ஏற்ற பகுதி என்று அப்பரிசோதனை மையத்தால் தெளிவாய் தெரிந்த பின்புதான் கட்டிடங்களை கட்டத் துவங்கினோம். அஸ்திவாரம் மட்டுமே மூன்றரை மீட்டர் ஆழத்துக்கு போட்டு இந்த கட்டிடங்களை மிக உறுதியாக கட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறது எஸ்.பி. சுந்தரசாமி அன்கோ நிறுவனம். ஆனால் ஏதோ சில காரணங்களால் கட்டிடம் உள் இறங்கி விட்டதால் எங்கள் மீது தவறு இருப்பதாக பழி போடுகிறார்கள்'' என்கிறார் டென்ஷனாய்.

ஒருவேளை இந்த மண் நான்கு மாடி கட்டிடங்களை தாங்குவதற்கு திறன் அற்றவை என்று தெரிய வந்தால் இங்குள்ள அனைத்து கட்டிடங்களுமே இடிக்கப் படுமா என்ற பயத்தை எல்லோர் மத்தியிலும் உண்டாக்கி விட்டிருந்த நிலையில் இந்த கட்டிடங்களின் கதி என்ன என்று அறிய சென்னை அண்ணா பல்கலையின் முன்னாள் தலைவரும், குடிசை மாற்று வாரியத்தின் ஆலோசகருமான ஏ.ஆர்.சாந்த குமார் தலைமையிலான வல்லுநர் குழு ஆய்வு செய்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஏ.ஆர்.சாந்தகுமாரிடம்... ""ஏற்கெனவே மண் பரிசோதனை செய்யப்பட்டுத்தான் கட்டிடம் கட்டப்பட்டதென்றால் கட்டிடங்கள் புதையுண்டு போனதற்கான காரணம் என்னவாயிருக்கும்'' என்றோம். ""நிச்சயமாக குடியி ருப்புகள் கட்டுவதற்கு ஏதுவான பகுதி என்று தான் முன் செய்யப்பட்ட மண் பரி சோதனை உறுதி செய்திருந்தது. இங்குள்ள மண் கட்டிடத்திற்கு ஏற்ற முறம் மண் வகையைச் சேர்ந்ததுதான்.

ஆனால் 40 சென்டிமீட்டருக்கு இந்த இரண்டு கட்டிடங்கள் மட்டுமே புதையுண்டு போயிருப்பதால் கட்டிடத்தின் தரை தளத்துக்கு கீழ் ஏதாவது தப்பு நடந்து இருக்கலாம் என்றே நினைக்கிறோம். இங்கே கட்டப்பட்டிருக்கும் மற்ற கட்டிடங்களின் உறுதியையும் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறோம். சாய்ந்திருக்கிற இந்த கட்டிடங்கள் இனிமேற்கொண்டு சாயாது என்பதற்கு உறுதி கொடுக்கலாம்.

இந்தக் கட்டிடத்தின் தரை தளத்தின் அருகே துளை யிட்டு சுண்ணாம்பு கலவை அல்லது சிமெண்ட் பாலை அத்துளையில் செலுத்தி கட்டிடத்தை நிச்சயம் உறுதியாக்கி விடுவோம். சாய்ந்த தற்கான சரியான காரணங்கள் இந்த முறம் மண்ணின் மாதிரி களை சென்னைக்கு அனுப்பிய பின்னரே தெரிய வரும். அந்த ஆய்வறிக்கையை உடனே தமிழக அரசிடம் சமர்ப்பிப்போம்'' என்கிறார் பொறுப்பாய்.

சம்பவ இடத்தைப் பார் வையிட்டு அங்குள்ள மக்களை சந்தித்த தமிழக குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் சுப.தங்கவேலன்... ""இந்த இடம் சுண்ணாம்புக்கல் நிறைந்த பகுதியென்பதால் கற்கள் கரைந்து மண்ணின் உறுதி தன்மையை குறைத்திருக்கலாம். இது என் யூகம்தான். ஆனால் பொதுமக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. இந்தக் குறை உடனே சரி செய்யப்பட்டு விடும். வல்லுநர்கள் கொடுக்கும் ஆய்வ றிக்கையின்படி உடனடி நடவடிக் கையும் எடுக்கப்படும்'' என்கிறார் உறுதியாய்.

இக்கட்டிடங்கள் புதைந்து போனதற்கு மண்ணின் தன்மை பொருந்தவில்லையோ என்னவோ பெரும் மனித உயிர்ச்சேதம் நிகழவிருந்ததை இந்த சம்பவம் முன்கூட்டியே எச்சரித்திருக்கிறது.

இதை மனிதத் தன்மையோடு உணர்ந்து இங்கே வசிக்கப் போகும் மக்களின் உயிர்களுக்கு அதிமுக்கியம் தந்து குறை களை களைய வேண் டும் ஆள்வோர்களும், அரசு அதிகாரிகளும்.

No comments:

Post a Comment