Tuesday, April 6, 2010

ஐ.ம.சு.மு 136 - 142 ஆசனங்களை கைப்பற்றுவது உறுதி


shockan.blogspot.com
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 136 தொடக்கம் 142 வரையான ஆசனங்களை கைப்பற்றுவது உறுதியென கருத்து கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கடந்த ஏழு நாட்களுக்குள் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில் 136 தொடக்கம் 142 வரையான ஆசனங்களில் ஐ.ம.சு. மு. முன்னணியில் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் எஞ்சியுள்ள நாட்களில் அவை மேலும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்த பொதுத் தேர்தல் தொடர்பான செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்:- கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஐ.ம.சு.மு. யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, திகாமடுல்ல, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய ஆறு மாவட்டங்களில் தோல்வியுற்றது. இம்முறை இவற்றில் மூன்று மாவட்டங்களை ஐ.ம.சு.மு. மீண்டும் கைப்பற்றுவது உறுதி என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 160 ஆசனங்களில் 125 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியது. 35 ஆசனங்களில் தோல்வியடைந்தது. இவற்றில் 21 ஆசனங்கள் வடக்கு, கிழக்கிற்குரியது. 14 ஆசனங்கள் ஏனைய பிரதேசங்களுக்குரிய தென்று குறிப்பிட்ட அமைச்சர், இவற்றில் 7 ஆசனங்களை இம்முறை ஐ.ம.சு.மு கைப்பற்றுவது உறுதி என்றும் குறிப்பிட்டார்.

வரலாற்றில் என்றும் இல்லாதவாற இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி19 மாவட்டங்களிலும் பெரும்பான்மையான ஆசனங்களை வெற்றிகொள்வது உறுதி. எதிர்வரும் 9ம் திகதி அதிகாலை வெளியாகும் தேர்தல் முடிவுகளில் இதனைக் காணமுடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசியலில் வங்குரோத்து அடைந்துள்ள எதிர்க்கட்சிகள் தமது தோல்வியை மூடிமறைக்கப் பல்வேறு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். (ரு-ஜ)

No comments:

Post a Comment