பொது மக்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்களது இயல்பு வாழ்க்கைக்குத் தடையான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபட வேண்டாம் என்றும் கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமைகள் தோன்றி எமது மக்களை பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கியதை நாம் மனதில் கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்வதே நாம் எமது சமுதாயத்திற்கு செய்யும் உன்னத கடமையாகும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக எழுந்துள்ள ஒரு தகவலை அடிப்படையாகக் கொண்டு, அவர் அப்பதவியை இராஜினாமா செய்யக் கூடாது எனக் கோரி இன்றைய தினம் பொது அமைப்புக்களினால் யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பொது ஹர்த்தால் நடவடிக்கையையடுத்தே அமைச்சர் அவர்கள் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் இவ்வாறான ஹர்த்தால்கள் கடையடைப்புக்கள் போன்ற பல்வேறு இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த போதெல்லாம் தான் அதற்கு தொடர்ந்தும் எதிராகவே கருத்துக் கூறி வந்துள்ளதை உணர்த்தியதுடன் பொதுமக்களின் உணர்வுகளையும் கருத்து கூறும் சுதந்திரத்தையும் தான் பெரிதும் மதித்து வருவதாகவும் அதற்காக பொதுமக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கைக்குத் தடையான வகையில் செயற்பாடுகளை மேற்கொள்வது தனக்கு மிகுந்த வேதனையைத் தருவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது இராஜினாமா தொடர்பில் தான் பரிசீலனை செய்து வருவதாகவும் இவ்விடயம் தொடர்பில் தான் பகிரங்கமாக அறிவிப்பதாகவும் எனவே இவ்வாறான ஹர்த்தால் செயற்பாடுகளை இப்போதும் சரி எதிர்காலத்திலும் சரி தவிர்த்துக் கொள்வதே எமது மக்களுக்கும் எமது சமுதாயத்திற்கும் நாம் செய்யும் சிறந்த கடமையாகும் என்றும் உணர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment