"மறக்க முடியுமா?' பகுதிக்கு இரண்டு கட்டுரைகள் எழுதுங்களேன் -என நண்பர் காமராஜ் அவர்கள் கேட்டுக்கொண்டதில் தொடங்கியது இப்பயணம். நாற்பது வாரங்கள், 80 பதிவுகள் என நீண்டு தொடர்கிறது.
காலத்தின் வலியாய், வலிகளின் அங்கலாய்ப்பாய், அங்க லாய்ப்புகளின் அந்தரிப்பாய், அந்தரிப்புகளின் அடக்க முடியாத கோபங்களாய்.நிறுத்திவிட நினைத்த தருணங்கள் பல.
அவ்வப்போது ஆசிரியர் நக்கீரன்கோபால், இணையாசிரியர் காமராஜ் இருவரிடமும் இதனைக் கூறுவேன். ""இல்லை, சகலமும் தகர்ந்துபோய் விட்ட அவநம்பிக்கையில் இருக்கும் நம் மக்க ளுக்கும், உணர்வாளர்களுக்கும் இன்று முக்கிய மாகத் தேவைப்படுவது ஆறுதலும், நம்பிக்கையும் -அதனைத் தருகிற சிறு களமாக நக்கீரன் இருக்க விரும்புகிறது. எனவே தொடர்ந்து எழுதுங்கள்'' என இருவரும் இப்படியாகப் பதில் தருவார்கள். தமிழீழக் கனவு பட்டுப்போகவில்லை, உயிர்த் துடிப்புடன்தான் இருக்கிறது என்று கூக்குரலிட விரும்பும் லட்சக்கணக்கான நக்கீரன் உணர் வாளர்களுக்கு இதுவரை எழுதிய யாவற்றையும் சமர்ப்பிக்கிறேன்.தினம் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து விடுவேன்.
4.25-க்கு எழுப்புமணி அடிக்கும். படுத்துக்கொண்டே ஐந்து நிமிடம் எனது "ப்ளாக்பெர்ரி' (Blackberry) அலைபேசியில் முக்கிய மின்அஞ்சல்களையும், ஈழத்துச் செய்திகளையும் துரிதகதியில் கழுகுப் பார்வை பார்ப்பது வழமை. இவ்விதழ் எண்பதாம் கட்டுரையை எழுதும் நாளதன் காலைப்பொழுதில் எனது ப்ளாக்பெர்ரி காட்டிய முதற் செய்தி பிரித்தானிய ஈழத்துப் பெண் வாணிகுமார் லண்டனிலிருந்து வெளிவரும் "தி அப்செர்வர்' (The Observer) இதழுக்கு முள்ளிவாய்க்கால் கொடுமையிலிருந்து தப்பிய தமிழ்ப் பெண்கள், சிங்கள ராணுவ மிருகங்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக் கப்படும் பெருங்கொடுமை பற்றி வழங்கியிருந்த செவ்வி.
வாணிகுமார் லண்டனில் மருத்துவப் படிப்பு முடித்தவர்.
வாணிகுமார் லண்டனில் மருத்துவப் படிப்பு முடித்தவர்.
பிரித்தானிய குடியுரிமை கொண்ட தமிழ்ப்பெண். சிங்களப் பேரினவாதம் தமிழரின் இறைமை, மனிதம் இரண்டையும் நசுக்கி அழிக்கத் தொடங்கிய இறுதி யுத்த நாட்களில் அம்மக்களின் துன்பங்களோடு நடந்தவர். முள்ளிவாய்க்காலின் இனஅழித்தல் கொடுமைகளை நேரில் கண்டவர். மே 18. ஆயுத மௌனிப்பிற்குப் பின் அகதியாய் வவுனியா "மெனிக் பார்ம்' வதை முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.
பிரித்தானிய அரசின் முயற்சியால் செப்டம்பர் 25-ம் நாள் விடுதலையாகி லண்டன் சென்ற அவர், தொடர்ந்தும் வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தன் உறவுகள் நண்பர்களின் பாதுகாப்பு கருதி இதுவரை பேசாதிருந்தார். இப்போது தான் கண்ட உண்மைகளுக்கு உலகினது மனசாட்சியின் முன் சாட்சியமாய் நிற்க முன்வந்துள்ளார்.
போரின் நாட்களில் காய முற்ற நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களுக்கு வைத்தியம் செய்த வாணிகுமார் வவுனியா மெனிக் முகாமை "வதை முகாம்' (Concentration Camp) என்றே வருணித்துள்ளார். அவரது வாக்குமூலத்தில் வஞ்சிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் மௌன வலிகள் பதிவாகியுள்ளன. இதோ வாணிகுமார் பேசுகிறார் : ""தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வல்லுறவானது பரவலாகவும், சாதாரணமான ஒன்றாகவும் இருந்தது. அதிகாரிகளுக்கு இசைய மறுத்தால் உயிரோடிருக்க முடியாதென்பது அப்பெண்களுக்குத் தெரிந்திருந்தது. பொது வாகவே தமக்கு நேரும் பாலியல் வல்லுறவுக் கொடுமைகளை அவமானம் கருதி தமிழ்ப்பெண்கள் வெளியில் சொல்வதில்லை. ஆனால் வதை முகாம் கொடுமை எந்த அளவுக்கென்றால் இளம்பெண்கள் பட்டியலிடப்பட்டு, அதிகாரிகளின் வல்லுறவுக்கு இசைந்தால் உணவோ, கொஞ்சம் சில்லறைப் பணமோ தரப்படும் நிலைக்கு அவர்களின் மனிதம் கீழ்மைப்படுத்தப்பட்டது.
''வாணிகுமாரின் வாக்குமூலம் உலக ஊடகங்களுக்குப் புதிய செய்தியாக இருக்கலாம். ஆனால் பாலியல் வல்லுறவை தமிழ் மக்களுக்கெதிரான இன அழித்தல் ஆயுதங்களில் ஒன்றாக இலங்கை ராணுவம் பயன்படுத்தியது, பயன்படுத்தி வருகிறதென்பது நமக்கொன்றும் புதிய செய்தியல்ல. நினைவுகள் பின்னோக்கித் திரும்புகின்றன. 1996-ம் ஆண்டு. தமிழீழ விடுதலை அரசியலில் நான் தீவிரமாக ஈர்க்கப் பட்டிருந்த காலம்.
அவ்வாண்டின் ஜூலை 18-ம் நாள் உலகெங்கும் பரந்து வாழ்ந்த தமிழருக்கெல்லாம் நம்பிக்கை கிளர்ச்சியூட்டி அலையலையாக வந்த விடுதலைப்புலிகளின் அணியினர், வன்னிப்பகுதியை ஆக்கிரமித்து நின்ற சிங்கள ராணுவத்தினரின் தலைமையகமான முல்லைத்தீவு முகாமினை தாக்கி அழித்தனர். அங்கு புலிகள் கைப்பற்றிய ஆயுதங்கள் பலநூறு கோடி ரூபாய் பெறுமதியானவை.
சுமார் 1200 ராணுவத்தினர் அத்தாக்குதலில் உயிரிழந்தனர்.உயிரிழந்த ராணுவத்தினரின் உடல்களை அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்ப டைக்கும் கடமையில் முன்நின்று இயங்கியவர்களாய் பெண்புலிகள் இருந்தனர். யுத்தகள செய்திகளை உன்னிப்பாய் கவனித்து வந்த எனக்கு இது வியப்பளித்தது.
நல்ல நிலையில் மீட்கப்பட்ட சுமார் 400 ராணுவ உடல்களை தூய வெள்ளைத் துணி கொண்டு போர்த்திப் பொதிந்திருந்தனர். எதிரியாயினும் தரையில் பிணமாகி விழுந்த பின் அது "வணக்கத்திற்கும் மாண்பிற்குமுரிய மனித உடல்' என்ற யுத்த நெறியைப் பின்பற்றி இலங்கை ராணுவத்தினரின் உடல்களுக்கு அப்பெண் புலிகள் உரிய போற்றுதல் செய்தனர். "ஏன் பெண்புலிகள்...' என்ற கேள்வி மட்டும் பல நாட்களாய் என்னை அப்போது குடைந்துகொண்டே இருந் தது.
பின்னர்தான் தெரிய வந்தது வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நேரடியாகப் பணித்ததன் பேரில்தான் பெண்புலிகள் முன்நிறுத்தப்பட்டார் களென்றும், சிங்கள ராணுவத்தினருக்கு நல்லொழுக்கப் பாடமொன்றை கற்றுத்தரவேண்டியே அவர் அவ்வாறு செய்தாரென்றதுமான உண்மை.பிரபாகரன் அவர்களது ஆழ்மனதில் ஆறாவடு ஏற்படுத்திய நிகழ்வாக 1993-ம் ஆண்டு புலிகள் நடத்திய பூநகரி ராணுவ முகாம் தாக்குதல் கூறப்படுகிறது. வலம்புரி 1, 2 என பெயரிடப் பட்ட நடவடிக்கைகள் மூலம் சிங்கள ராணுவம் 1992-ல் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்த பூநகரி பகுதி ராணுவ ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. பூநகரியை மீட்டெடுக்க 1993 நவம்பரில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட பாரிய நகர்வில் பெண்புலிகள் அணி முக்கிய அங்கமாய் நின்றன. ஆனால் புலிகளின் தாக்குதல் திட்டங்களை அவர்களுக்கு சமையல் வேலை செய்த இரு துரோகிகள் சிங்கள ராணுவத்தினருக்குச் சொல்லிவிட பொறிகள் பரப்பி புலிகளின் வரவிற்காய் ராணுவத்தினர் காத்திருந்தனர்.
எதிர்பாரா திருப்பித் தாக்குதலை எதிர்கொண்ட புலிகளின் அணிகள் கடும் இழப்புக்களோடு ஆனால் மெய்சிலிர்க்க வைக்கும் தற்காப்புச் சமர் நடத்தி பின் நகர்ந்தன. இச்சமரில் வீரமரணம் தழுவிய பெண்புலிகளின் மார்பகங்களை அறுத்தும், தாய்மைப் பீடங்களில் விறகுக் கம்புகளை அடித்தேற்றி யும் ராணுவம் செய்த கீழ்மைச்செயல் தலைவர் பிரபாகரன் உள்ளத்தில் அழியாத காயத்தை உண்டாக்கியதாகச் சொல்லப் படுகிறது. அக் கீழ்மைக்குக் கீழ்மையால் பதில்தர விரும்பாத அவர் பண் பொழுக்கத்தால் பதில்கூற விரும்பி னார். அதன் வெளிப்பாடாகத்தான் முல்லைத்தீவு முகாமில் உயிரிழந்த ராணுவ உடல்களை பெண்புலிகள் வணக்கத்துடன் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்ப டைக்கச் செய்தார்.வானொலி நாட்களில் சிறு குழுவாய் நின்று சிதைக்கப்பட்ட தமிழ் பெண்களுக்காய் அனைத்துலக அரங்குகளில் நாங்கள் நடத்திய சிறு சிறு போர்களின் மறக்க முடியா நினைவுகள் அணி வகுக்கின்றன.
சிலப்பதிகாரத்துக் கண்ணகிக்கு கோயில் வைத்த புங்குடு தீவில், ஆண்டாண்டு காலமாய் அக்கோயிலை பராமரித்து வந்த அர்ச்சகரின் மகள், சிங்கள ராணுவக் காடையர்கள் பலரால் சிதைக்கப்பட்டு, சிதைந்தபின், அவளின் தாய்மைப் பீடத்திலேயே வெடிகுண்டு வைத்துத் தகர்த்த அரக்கத்தனத்தின் நாளில்...1996 செப்டம்பர் 7.
சுண்டிக்குளி உயர்நிலைப்பள்ளியில் காலாண்டுத் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயது கிருஷாந்தி குமாரசாமி என்ற பிள்ளையை கைதடி ராணுவ முகாமின் காடையர்கள் குழுவாய் புணர்ந்து அரை உயிர் அகற்ற, சிலமணிகள் மயங்கிக் கிடந்து பின் கண் விழித்து "தண்ணீர் தாருங்கள்' எனக்கேட்ட அந்தப் பிள்ளையை மேலும் ஆறுபேர் வன்புணர்ந்து மூச்சடக்க, இரவில் பிள்ளையைத் தேடிப்போன 59 வயது தாய் ராசம்மா, 16 வயது தம்பி பேரின்பன், துணைக்கு உடன்போன 35 வயது கிருபாகரன் மூவருமே கண்ட துண்டமாய் வெட்டப்பட்டு புதைக்கப்பட்ட கொடுமையின் நாளில்...அதே 1996-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் நாள் 22 வயது ரஜினி என்ற தமிழ் நங்கை கனடா நாடு செல்வதற்கு விசா கிடைத்த சந்தோஷச் செய்தியை கோண்டாவிலில் வசிக்கும் தன் உறவுகளுக்குச் சொல்லிவிட்டுத் திரும்புகையில் கோண்டாவில் - உரும் பிறாய் சாலையில் வைத்து சிங்கள ராணுவ மிருகங்களால் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலையான நாளில்... போர்கள் செய்தோம். நீதி கிடைக்கவில்லைதான்.
ஆயினும் எங்களுக்குத் தெரிந்த களங்களில் சமர் செய்தோம். குறைந்தபட்சம் அனைத் துலக மனித உரிமை மீறல் ஆவணங்களில் பதிவேனும் செய்தோம்.அன்று ஒன்றிரண்டாய் ஆங்காங்கு நடந்தவை இன்று நூற்றுக்கணக்கிலாக நடக்கிறது. தமிழ்ப்பெண்களின் உடல் சார்ந்த அடிப்படை உரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாய் இருந்த சிங்களப் பேரினவாத வக்கிரத்திற்கு தடையிட்டுப் பாதுகாப்பாய் நின்றவர்கள் விடுதலைப்புலிகள். முப்பதாண்டு கால விடுதலைப் போராட்டத்தில் ஒரு சிங்களப் பெண்ணிடம்கூட விடுதலைப்புலிப் போராளிகள் முறை தவறி நடந்ததாய் நிகழ்வில்லை. அத்துணை ஒழுக்கப் பெருமிதத்தின் பிள்ளைகளாய் நின்றவர்கள் அவர்கள்.
அவர்களை அழித்து முடித்துவிட்ட நிம்மதியில் உலகத்தின் நீதிமான்களெல்லாம் அகன்றுபோய்விட்ட நிலையில் சிறு போர்களே இன்று நம்மால் ஆகக்கூடியது. செய்வோம்.
உண்மைகள் உறங்குவ தில்லை. சிங்களப் பெண்கள் ஒருவரைக்கூட சிதைக்காத புனிதமிகு விடுதலைப்போராட்டம் நடத்திய ஒரு இனத்தின் மக்கள் என்ற பெருமிதத் திமிரோடு அறப்போர் செய்வோம்.
No comments:
Post a Comment